Latestமலேசியா

இனி வரலாறு பாடத்திட்டம் அரசியல் சார்பின்றி தொடரும் – துணை கல்வி அமைச்சர் உறுதி

இனி வரலாறு பாடத்திட்டம் அரசியல் சார்பின்றி தொடரும் – துணை கல்வி அமைச்சர் உறுதி

கோலாலம்பூர், பிப்ரவரி 11 – பள்ளிகளில் கற்பிக்கப்படும் வரலாறு பாடத்திட்டம் எந்தவித கட்சிசார்ந்த அரசியல் தாக்கத்திற்கும் உட்படாது என்றும், அது துல்லியமாகவும் சமநிலையுடனும் தொடரும் என்றும் கல்வி அமைச்சு உறுதியளித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பேசிய துணை கல்வி அமைச்சர் Wong Kah Woh, வரலாறு பாடத்திட்டம் எப்போதும் தேசிய கல்வித் தத்துவத்துடன் ஒத்துப்போவதாகவும், அனைத்து சமூகத் தரப்புகளையும் கருத்தில் கொண்டு சமச்சீராகவும் வடிவமைக்கப்படுகிறது என்றார். மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் Syed Saddiq Syed Abdul Rahman, நாடாளுமன்றத்தில் தற்போதைய பாடத்திட்டம் எவ்வளவு இடைவெளியில் மறுபரிசீலனை செய்யப்படுகிறது என்ற கேள்வியை எழுப்பியபோது அவர் இதனை தெரிவித்தார்.

ஆளும் கட்சிக்கு சாதகமாக வரலாற்றை அரசியல் நோக்கில் சாய்வுபடுத்துவது பெற்றோர்களிடையே அசௌகரியத்தையும் அதிருப்தியையும் உருவாக்கக்கூடும் எனவும் Syed Saddiq, எச்சரித்தார்.

இதற்கு பதிலளித்த Wong Kah Woh, தேவைக்கேற்ப பாடத்திட்டம் காலமுறைப்படி மறுஆய்வு செய்யப்படுவதாகவும், அதன் உள்ளடக்கம் துல்லியமும் சமநிலையும் காக்கப்படுவதை அமைச்சு உறுதி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், புதிய பள்ளி பாடத்திட்டம் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்றும், முதற்கட்டமாக முதலாம் ஆண்டு மற்றும் முதல் படிவ மாணவர்களுடன் தொடங்கி, 2028ஆம் ஆண்டில் இரண்டாம் ஆண்டு மற்றும் இரண்டாம் படிவ மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இதற்கு முன்னதாக, Hulu Langat நாடாளுமன்ற உறுப்பினரான Sany Hamzan, Bersih இயக்கம், உள்நாட்டு பாதுகாப்புச் சட்டமான ISA எதிர்ப்பு போராட்டம், Reformasi இயக்கம் மற்றும் Sheraton Move போன்ற சமகால அரசியல் நிகழ்வுகளையும் வரலாறு பாடங்களில் சேர்க்க பரிந்துரைத்திருந்தார்.

இந்நிகழ்வுகள் நாட்டின் வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்தாலும், பாடத்திட்டத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படும் போது வரலாற்றாசிரியர்கள், கல்வியாளர்கள், தேசிய காப்பகத் துறை உள்ளிட்ட அமைப்புகளுடன் விரிவான ஆலோசனை நடத்தப்படும் என்றும், ஆசிரியர்கள், தொழில்முறை அமைப்புகள் மற்றும் பொதுமக்களுடனும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் என்றும் வோங் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!