ஈப்போ, ஜூன் 11 – சவால்கள் நிறைந்த இவ்வுலகில் இலக்கை நிர்ணயித்து ஒரு நோக்கத்துடன் தெளிவான பாதையில் பயணித்தாலே எந்த தேர்விலும் சிறந்து விளங்க முடியும் என்கிறார் SPM தேர்வில் 11 ஏ-க்கள் பெற்ற ருபேந்திரன் செல்வ சிதம்பரம்.
லட்சியத்தை எட்டி பிடிக்கக் குறிக்கோளுடன் தொடங்கிய தனது பயணத்தை வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்துக் கொள்கிறார் இவர்.
ஈப்போவை சேர்ந்த ருபேந்திரன், சுய தொழில் செய்யும் தந்தை செல்வ சிதம்பரத்திற்கும் தாதியாகப் பணிபுரியும் தாய் பரமேஸ்வரிக்கும் பிறந்த இரண்டாவது மகன்.
தனது அக்கா Jahnani போலவே இவரும் தனது எஸ்பிஎம் தேர்வில் 11 ஏக்கள் பெற்று குடும்பத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
கல்வியில் மட்டுமல்ல பல விளையாட்டிலும் இவர் கெட்டிக்காரர்.
விஞ்ஞான தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டிருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்கள் தங்களுக்கான ஒரு இலக்கின் பாதையில் செல்வது மிக அரிதாகக் காணப்படுவதாக ருபேந்திரன் சுட்டிக்காட்டினார்.
மனம்போன போக்கில் பயணிக்காமல், கல்விக்கும் புறப்பாட நடவடிக்கைக்கும் மாணவர்கள் நேரத்தைச் சரியாக வகுத்துச் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
இன்று எல்லாவற்றையும் எளிதில் தேடி பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி வாய்ப்புகள் பெருகிக் கொண்டிருக்கின்றன.
இதனால் கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாமல் எந்தெந்த காலகட்டத்தில் எவ்வாறு செய்யலாம் என்பதை கண்டறிந்து அதற்கேற்ப உழைக்கும் மாணவர்களுக்கே வெற்றி நிச்சயம் என்று உறுதியளிக்கும் 11 ஏக்கள் பெற்ற ருபேந்திரனுக்கு வணக்கம் மலேசியாவின் மனமார்ந்த வாழ்த்துகள்.