
கோலாலம்பூர், ஜூன் 26 – 2026-ஆம் ஆண்டிற்கான தேசிய தினம் மற்றும் மலேசிய தினக் கொண்டாட்டங்களுக்காக “வளப்பத்தை அனுபவிப்போம்” (Kesejahteraan Dinikmati) என்ற கருப்பொருளை தேர்ந்தெடுக்க இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.
வளர்ந்த மற்றும் இணக்கமான நாட்டை உருவாக்கும் அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையிலேயே இந்தக் கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தொடர்பு அமைச்சரும் மடானி அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளருமான டத்தோ பாமி பட்சில் தெரிவித்தார்.
இந்த ஆண்டிற்கான தேசிய தினம் மற்றும் மலேசிய தினக் கொண்டாட்டங்களுக்கு ‘மலேசியா மடானி‘ சின்னமே அதிகாரப்பூர்வ சின்னமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்படும்.
அதே வேளையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சின்னம் மற்றும் கருப்பொருள் ஆகியவை 2026-ஆம் ஆண்டின் கொண்டாட்டங்களில் முக்கிய அடையாளமாகத் திகழும்.
வளர்ந்த, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் இணக்கமான நாட்டை உருவாக்கும் அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை இந்தக் கருப்பொருள் பிரதிபலிக்கிறது.
அதாவது ஒவ்வொரு தனிமனிதனும் முழுமையான நலவாழ்வுக்கான வளப்பத்தை அனுபவிக்க முடியும் என்பதை இது குறிக்கிறது.
நல்வாழ்வு எனபது குறிப்பிட்ட சில குழுக்களால் மட்டுமே அடையப்படுவதாக இல்லாமல், அனைத்து மலேசியர்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்வதே இந்தக் கருப்பொருளின் முக்கிய நோக்கமாகும் என்று அவர் விளக்கினார்.
தேசிய தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் தங்கள் நன்றியுணர்வையும் தேசப்பற்றையும் வெளிப்படுத்த ஒன்றிணையுமாறு அனைத்து மலேசியர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
எனவே இவ்வாண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய தினக் கொண்டாட்டம் மிகச் சிறப்பாகவும், அதே வேளையில் எளிமையான முறையிலும், கொண்டாட்ட உணர்வில் எந்தக் குறையும் இல்லாமலும் நடைபெறும் என்பதை அறிவிப்பதில் தாம் மகிழ்ச்சியடைவதாக பாமி தெரிவித்தார்.



