பாடாங் பெசார், ஜூன் 5 – இஸ்ரேலில் இருந்த வந்த “கண்டெய்னர்” அல்லது கொள்கலனை பயன்படுத்தியதால், தாய்லாந்திலிருந்து உறைந்த கோழி இறைச்சியை ஏற்றிக் கொண்டு, பாடாங் பெசாருக்குள் நுழைந்த
டிரக் லோரி ஒன்றை, உடனடியாக திரும்ப அனுப்ப அரச மலேசிய சுங்கத் துறை உத்தரவிட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, நண்பகல் மணி 12.03 வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்ததை, பெர்லீஸ் மாநில சுங்கத் துறை இயக்குனர் இஸ்மாயில் ஹசிம் உறுதிப்படுத்தினார்.
ஏற்றி வந்த பொருட்களை இறக்குமதி செய்யும் அனுமதிக்காக விண்ணப்பிக்க, படாங் பெசார் ICQS சோதனை சாவடிக்குள் நுழைய முற்பட்ட போது, அந்த டிரக் அடையாளம் காணப்பட்டது.
அந்த கொள்கலனின் மேல் பதிக்கப்பட்டிருந்த ZIM எனும் முத்திரையை கொண்டு அது அடையாளம் காணப்பட்டதாக இஸ்மாயில் சொன்னார்.
அதனால், அந்த டிரக் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு, இஸ்ரேலை தளமாக கொண்டு செயல்படும் நிறுவனத்துக்கு அது சொந்தமானது என்பது கண்டறியப்பட்டவுடன், உடனடியாக தாய்லாந்துக்கு திரும்ப அனுப்பப்பட்டது.