
ஈப்போ, செப்டம்பர்-24,ஈப்போவில் 53 வயது ஆடவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், 3 வெளிநாட்டு மாணவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
17 முதல் 20 வயதுக்குட்பட்ட அந்த மூவரும், ஈப்போவில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 18-ஆம் தேதி, கம்போங் கூச்சாயில் முகத்தில் காயங்களுடன் 53 வயது ஆடவர் ஒருவர் சுயநினைவின்றி கிடந்ததை பொது மக்கள் கண்டுபிடித்து போலீஸில் புகார் செய்தனர்.
இதையடுத்து அவர் ராஜா பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, 3 நாட்கள் சிகிச்சைப் பெற்ற நிலையில் உயிரிழந்தார்.
சவப் பரிசோதனையில், தலையில் ஏற்பட்ட பலத்த தாக்கமே அவரது மரணத்திற்குக் காரணம் என கண்டறியப்பட்டதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் நஜிப் ஹம்சா (Najib Hamzah) தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, 17 முதல் 20 வயதுடைய 3 வெளிநாட்டு மாணவர்களை போலீஸார் ஈப்போவில் உள்ள அவர்களது வீடுகளில் கைதுச் செய்தனர்.
இந்தச் சம்பவம் கொலைக்கான குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



