
கோலாலம்பூர், ஜனவரி 14 – பத்து மலையிலுள்ள திருமுருகன் உருவத்தை AI எனும் செயற்கை நுண்ணறிவு மூலம் இழிவுபடுத்தும் வகையில் மாற்றியமைத்த டிக்டோக் பயனர் ‘Koshish Lama’ பதிவிட்ட காணொளி தற்போது பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்தக் காணொளியின் கீழ் நேப்பாள மொழியில் ஏதோ ஒரு கருத்தும் பதிவிடப்பட்டிருக்கிறது.
இதனிடையே, இக்காணொளி பலரின் கண்டனத்தைப் பெற்றது மட்டுமல்லாது, இறைவனை இழிவு செய்யும் செயலாகச் சர்ச்சையாகி வருகிறது.
இதுகுறித்து தனது கருத்தை வெளியிட்ட மலேசிய இந்து ஆலய – இந்து அமைப்புகளின் பேரவையான மஹிமாவின் தலைவரும் தேவஸ்தானத்தின் அரங்கவாளருமான டத்தோ சிவக்குமார், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மதங்களைக் குறிப்பாக இந்து மதத்தை இழிவு படுத்தும் வகையில் பதிவேற்றம் செய்யப்படும், இது போன்ற காணொளிகளைச் சமூக வலைத்தளங்கள் சுயமாகவே கண்டறிந்து நீக்கும் அம்சத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அண்மையக் காலமாகவே பிற மதங்களை இழிவுபடுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
ஆலயத்தில் யாரோ ஒருவர் இது போன்ற இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபட்டால், தங்களின் கவனத்திற்கு அது வரும்பொழுது, அவை உடனடியாக நிறுத்தப்படலாம்; ஆனால் இணையத்தில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற நாச வேலைகள் செய்யப்படும் பொழுது கோவில் நிர்வாகமோ அல்லது சமய அமைப்புகளோ இப்படிச் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்த முடியுமே தவிரத் தடுக்கும் சாத்தியம் குறைவே என்றார், அவர்.
எனவேதான், இது போன்ற செயல்களைத் தடுக்க சமூக வலைத்தளங்களின் பங்கு இங்கு அளப்பரியதாகும் எனக் கூறியுள்ளார் சிவக்குமார்.
இதனிடையே, இந்தக் காணொளி தொடர்பாக PAS ஆதரவாளர்களின் பேரவை தனது கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மலேசியக் கலாச்சாரத்தையும் மதிப்புகளையும் மதிக்காத வெளிநாட்டவர்களை அது கடுமையாகச் சாடியிருக்கிறது.
மலேசியாவில் வாழும் வெளிநாட்டவர்கள் இந்த நாட்டின் பண்பாட்டை அறிந்து, மதிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
மத உணர்வுகளை இழிவுபடுத்தும் செயல்கள் நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் என அறிவுறுத்தி, இவ்வாறான செயல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில் தெளிவான மற்றும் திடமான சட்டங்கள் அமல்படுத்தப்படும் வேண்டும்.
அதே சமயத்தில், மலேசிய மதங்களையும் கலாச்சார வேறுபாடுகளையும் பாதுகாக்க அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.