
வாஷிங்டன், ஏப்ரல்-20-போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் முற்றிலும் மீறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அவர் விடுத்துள்ள எச்சரிக்கை உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hormuz நீரிணை அருகே சனிக்கிழமையன்று இரண்டு கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை அடுத்து ட்ரம்ப் கடும் சினமடைந்துள்ளார்.
அதனை தனது Truth Social சமூக வலைத்தளத்தில் வெளிக்காட்டிய ட்ரம்ப், _”இனிமேல் கருணை காட்டப்படாது. இனியும் நான் நல்லவனாக இருக்கப் போவதில்லை”_ என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா முன்வைக்கும் நிபந்தனைகளை ஈரான் ஏற்காவிட்டால், அந்நாட்டின் ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையமும், ஒவ்வொரு பாலமும் தரைமட்டமாக்கப்படும் என்று அவர் பகிரங்கமாக எச்சரித்தார்.
இந்த இக்கட்டான சூழலில், அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க தூதுக்குழுவினர் பாகிஸ்தான் சென்றுள்ளனர்.
இஸ்லாமாபாத்தில் இன்று ஈரானுடன் இறுதிக் கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
“இதுவே கடைசி, இனியும் பேச்சுவார்த்தை கிடையாது” என ட்ரம்ப் எச்சரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் கச்சா எண்ணெய் சந்தையில் மீண்டும் நிச்சயமற்றச் சூழல் உருவாகியுள்ளது.
போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளதால், உலக நாடுகள் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளன.



