
கோலாலம்பூர், ஏப் 9 –
கோலா லங்காட், ஏப் 9 – இறைச்சி வெட்டும் கத்தியைக் கொண்டு போலீசாரையும் பொது மக்களையும் தாக்க முயன்றதோடு அவர்களின் ரோந்துக் கார்களையும் சேதப்படுத்த முயன்ற ஆடவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் குறித்து விளக்கமளித்த கோல லங்காட் மாவட்ட காவல் துறைத் தலைவர் சூப்பிரெண்டன் முகமட் அக்மல் ரிசால் பின் ராட்சி தெலுக் பங்லிமா காராங் பகுதியில் தெலுக் மெங்குவாங் வட்டாரத்தில் நேற்று பிற்பகலில் கத்தி ஏந்திய ஆடவனின் ஆவேச நடவடிக்கை காரணமாக ஒரு உணவகம் சேதமடைந்ததோடு
பொதுமக்களின் வாகனங்களும் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து அவ்வாடவனை போலீசார் விரைந்து கைது செய்தனர்.
நேற்று பிற்பகல் சுமார் 3.30 மணியளவில், தெலுக் பங்லிமா காராங் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் குழுவினரிடமிருந்து அவசர தகவல் பெறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை கட்டுப்படுத்த முயன்றனர். அங்கு சென்றபோது, ஒரு உள்ளூர் ஆடவன் இறைச்சி வெட்டும் கத்தி மற்றும் பிரம்பை ஏந்தி, மிகுந்த கோபத்துடன் அட்டூழியம் புரிந்தது கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.
அவனது திடீர் தாக்குதல் காரணமாக அங்கு இருந்த பொதுமக்கள் அச்சத்துடன் ஓடி தப்பியதாகக் கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி, போலீசார் சம்பவ இடத்தில் அவரை கட்டுப்படுத்த முயன்றபோது, அந்த ஆடவன் கத்தியால் போலீஸ் அதிகாரிகளையும் ரோந்து கார்களையும் நோக்கி தாக்க முயன்றுள்ளான். இதனால் போலீசாரின் பாதுகாப்புக்கும் பொதுமக்களின் உயிருக்கும் கடுமையான அச்சுறுத்தல் நிலவியது.
எனினும், போலீசாரின் விரைவு மற்றும் திறமையான நடவடிக்கையால், சூழ்நிலை விரைவில் கட்டுப்படுத்தப்பட்டு, சந்தேக ஆடவன் கைது செய்யப்பட்டான். பின்னர் அவன் மருத்துவ பரிசோதனைக்காக கிள்ளான் தெங்கு அம்புவான் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான்.
அரசு பணியாளர்களின் கடமையை தடுக்க வன்முறையை பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் தண்டனைச் சட்டம் பிரிவு 353 இன் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்



