Latestமலேசியா

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் அன்வார் வருகை; ஏழை மாணவர்களுக்கு 1 மில்லியன் ரிங்கிட் கூடுதல் மானியம் அறிவிப்பு

பெடோங், ஜூன்-7-கெடா, பெடோங்கில் உள்ள ம.இ.காவின் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு இன்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பணிநிமித்தமாக வருகைப் புரிந்தார்.

இதன் வழி, துன் அப்துல்லா அஹ்மாட் படாவிக்குப் பிறகு, ஏய்மஸ்ட் பல்கலைக் கழகத்திற்கு நேரில் வந்த இரண்டாவது பிரதமராக அன்வார் வரலாறு படைத்துள்ளார்.

காலை 10 மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த பிரதமரை, உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சம்ரி அப்துல் காடிர் மற்றும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வேந்தரும் ம.இ.கா தேசியத் தலைவருமான தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனும் எதிர்கொண்டு சிறப்பாய் வரவேற்றனர்.

பல்கலைக்கழக இணை வேந்தரும்
ம.இ.கா துணைத்தலைவருமான டத்தோ ஶ்ரீ சரவணன், துணை வேந்தர் பேராசிரியர் கதிரேசன், MIED வாரிய உறுப்பினர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்டோரும்
உடனிருந்தனர்.

கல்வி வாய்ப்பு நியாயமான முறையில் அனைத்துச் சமூகத்துக்கும் கிடைப்பதை உறுதி செய்வது தனது முக்கிய நோக்கமென்றும் ஏழைகளும் விளிம்பு நிலை மக்களும் அதில் விடுபட்டு விடக்கூடாது என்பதும் தமது தீவிர இலக்கு என்றும் பிரதமர் தமதுரையில் கூரினார்.

தாம் படித்த Dr. அம்பேத்கார்-ரின் வாழ்க்கை வரலாறு நூல், கல்வி எப்படி புறக்கணிக்கப்பட்ட சமூகத்தையும் அதிலிருந்து மீட்டெடுக்க உதவும் என்பதை தமக்கு உணர்த்தியதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.

நாட்டின் மனிதவள மேம்பாட்டில் ஏய்ம்ஸ்ட் மற்றும் ம.இ.காவின் கல்விக் கரமான MIED நிறுவனங்களின் பங்களிப்பைப் வெகுவாகப் பாராட்டிய பிரதமர், வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி நலனுக்காக வருடாந்திர ஒதுக்கீட்டோடு மேலும் ஒரு மில்லியன் ரிங்கிட் கூடுதல் நிதி ஒதுகீட்டை அறிவித்தார்.

உரைக்குப் பின் பல்கலைக்கழக வளர்ச்சிக்காக, விக்னேஸ்வரனிடம் 25 மில்லியன் ரிங்கிட் வருடாந்திர அரசாங்க மானியத்திற்கான மாதிரி காசோலையை அன்வார் வழங்கினார்.

தொடர்ந்து, மாணவர்களுடனான ‘TEMU ANWAR’ விவாத அமர்விலும் பிரதமர் கலந்துகொண்டார்.

மத்திய அரசின் தற்போதைய ஆதரவுகளோடு, ஏழை இந்திய மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை உறுதிச் செய்ய இந்த கூடுதல் நிதி பெரிதும் உதவும் என ம.இ.கா பிரமுகர்கள் நெகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மாணவர்கள், பிரமுகர்கள் உட்பட 3,000-க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்துகொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!