
நியூ யோர்க், ஜூலை-18 – அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கால்பந்து இறுதியாட்டத்திற்கு முன்னதாக, மில்லியன் கணக்கான மக்கள் சுற்றுச்சூழல் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.
மலேசிய நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை நியூ யோர்க்-நியூ ஜெர்சியில் ஸ்பெயின் – அர்ஜேண்டினா இடையே உலகக் கிண்ண இறுதியாட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், கனடா மற்றும் மினசோட்டாவில் இருந்து பரவிய காட்டுத்தீயின் புகை, அமெரிக்காவின் பல பகுதிகளை மூடியுள்ளது.
Detroit தற்போது உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக மாறியுள்ளது.
வாஷிங்டன் மற்றும் சிக்காகோ போன்ற நகரங்களிலும் காற்றின் தரம் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.
இந்த காற்றுத் தூய்மைக் கேடு “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என அதிபர் டோனல்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தற்போது காற்றின் தரம் ஓரளவு சீராக இருந்தாலும், இன்று பின்னேரம் காற்று திசை மாறினால் மீண்டும் புகை மூட்டம் அதிகரிக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
போட்டி ஏற்பாட்டாளர்கள் நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருகின்றனர்.
மக்கள் சுவாசக் கவசம் அணியவும், தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்கவும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பருவநிலை மாற்றம் காரணமாக காட்டுத்தீ நீடிப்பதும், தீவிரமடைவதும் இந்தச் சிக்கலை மேலும் மோசமாக்கியுள்ளது.



