
கோலாலம்பூர், ஜூலை 21 – டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெற்ற 2026 உலகக் கோப்பை காற்பந்து இறுதிப் போட்டியின் நேரடி ஒளிபரப்புக்குப் பிறகு, புல்வெளிப் பகுதிகளை சுத்தம் செய்வது தங்களின் பொறுப்பு அல்ல என்று Alam Flora தெரிவித்துள்ளது.
போட்டி முடிந்தவுடன், சாலைகள், நடைபாதைகள் மற்றும் கற்கள் பதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த குப்பைகளை அகற்றி, சுத்தம் செய்யும் பணியை தங்களது பணியாளர்கள் உடனடியாக செய்ததாக அந்நிறுவனம் கூறியது. ஆனால், புல்வெளி மற்றும் கூடாரங்களின் கீழுள்ள பகுதிகள் தங்களது பணிப் பொறுப்பில் இல்லை என்றும் விளக்கியது.
இதற்கிடையில், கோலாலம்பூர் மாநகராட்சி மன்றமான DBKL அந்த இடத்தில் விடப்பட்டிருந்த குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள் விழாக்களைக் கொண்டாடலாம், ஆனால் பொது இடங்களை சுத்தமாக வைத்திருப்பதும் அனைவரின் பொறுப்பு என்று DBKL நினைவூட்டியுள்ளது.



