Latestமலேசியா

காவல் துறை சோதனைகள் குறித்த தகவல்களைக் கசியவிட 2,400 ரிங்கிட் கையூட்டு பெற்றதாக சார்ஜென்ட் மேஜர் மீது குற்றச்சாட்டு

கோலா திரங்கானு, செப்-30-திரங்கானுவில் நான்காண்டுகளுக்கு முன் காவல் துறையின் நடவடிக்கைகள் மற்றும் சோதனைகள் குறித்த தகவல்களை முன்கூட்டியே வழங்க 2,400 ரிங்கிட் கையூட்டு பெற்றதாக 43 வயதான சார்ஜென்ட் மேஜர் Roslee Mamat மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் பிரிவு 17(a)-இன் கீழ் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

Setiu மாவட்டக் காவல் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய Roslee, நபர் ஒருவரிடம் இருந்து 400 முதல் 1,000 ரிங்கிட் வரையிலான தொகைகளை கையூட்டாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

2022-ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சிலாங்கூரின் Shah Alamமில் உள்ள வங்கி கிளை மற்றும் Setiu-வின் Gong Terap மசூதி ஆகிய இடங்களில் அச்சட்டவிரோத சம்பவங்கள் நிகழ்ந்தன. காவல் துறையின் நடவடிக்கைகள் மற்றும் சோதனைகள் குறித்த முன்கூட்டிய தகவல்கள், சம்பந்தப்பட்டவர்கள் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க உதவியதாகவும் கூறப்படுகிறது.

இவ்வேளையில், அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த Rosleeக்கு நீதிமன்றம் ஒரு நபர் உத்தரவாதத்துடன் 6,000 ரிங்கிட் பிணை வழங்கியது. மேலும், அனைத்துலக கடப்பிதழை ஒப்படைப்பது உள்ளிட்ட கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. வழக்கு விசாரணை மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க அக்டோபர் 27ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!