
கோலாலம்பூர், செப்-30-Ampang Jaya, Ampang Waterfront பகுதியில் உள்ள கார் பழுதுபார்க்கும் பட்டறைக்கு வெளியே கடந்த வியாழக்கிழமை அதிகாலை கடத்தப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Mulia என்றறியப்படும் அந்நபரை ஹோண்டா ரக வாகனத்தில் வந்த சந்தேக நபர்கள் அழைத்துச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக பட்டறை உரிமையாளர் தெரிவித்தார். Mulia வீடு திரும்பாததைத் தொடர்ந்து, அவரது மனைவியும் சகோதரரும் தம்மைத் தொடர்பு கொண்டதாக அவர் கூறினார்.
சிசிடிவி காட்சிகளைப் பார்வையிட்ட பின், முலியா கடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறி அவரது குடும்பத்தினரை காவல்துறையில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியதாகவும் பட்டறை உரிமையாளர் குறிப்பிட்டார். விசாரணைக்காக சிசிடிவி காட்சிகளும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
இவ்வேளையில், கடந்த திங்கட்கிழமை Mulia உயிரிழந்துவிட்டதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அவரது மனைவி தம்மிடம் தெரிவித்ததாக பட்டறை உரிமையாளர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, Serdang மருத்துவமனையில் Muliaவின் மனைவி மற்றும் சகோதரரைச் சந்தித்ததாகவும் அவர் விவரித்தார்.
மற்றொரு நிலவரத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காஜாங், Semenyih பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆடவரின் சடலம் Muliaவுடையதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அது தொடர்பில் காஜாங் மற்றும் அம்பாங் மாவட்டக் காவல்துறையிடமிருந்து உறுதியான தகவல் பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விசாரணைக்கு உதவ சில சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சில முக்கிய சந்தேகப் பேர்வழிகளைத் தேடும் நடவடிக்கை தொடரப்படுகிறது.



