
கோலாலம்பூர், நவம்பர் 17 – 2023 முதல் 2026ஆம் ஆண்டு வரை, சாலை வரி காலாவதியான நிலையில் இயக்கப்பட்ட 35,555 வாகனங்களைச் சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ பறிமுதல் செய்துள்ளது.
அதே காலகட்டத்தில், காலாவதியான மோட்டார் வாகன உரிமங்கள் தொடர்பாக 16 லட்சத்து 8 ஆயிரத்து 238 (1,608,238) அபராத அறிவிப்புகளும் (P22) வெளியிடப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் மயமாக்கல் என்பது சட்ட அமலாக்க நடவடிக்கைகளில் தளர்வு வழங்குவதாகப் பொருளல்ல. வாகனத்தின் முன்பக்கக் கண்ணாடியில் சாலை வரியை ஒட்ட வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும், அதிகாரிகள் JPJ-யின் டிஜிட்டல் பதிவுகள் மூலம் உரிமத்தின் செல்லுபடித் தன்மையைச் சரிபார்க்க முடியுமென அமைச்சு குறிப்பிட்டது.
2023 பிப்ரவரி 10ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் சாலை வரி முறை, அச்சிடும் செலவைக் குறைக்கவும், அலுவலகங்களில் நெரிசலைத் தவிர்க்கவும், MyJPJ செயலி உள்ளிட்ட இணையவழித் தளங்கள் மூலம் சாலை வரியைப் புதுப்பிக்கவும் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், செல்லுபடியாகும் உரிமமின்றி வாகனங்களை இயக்குவோர் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்கீழ் நடவடிக்கைக்கு உட்படுவர் என அமைச்சு தெரிவித்தது.



