
கோலாலம்பூர், மார்ச் 4 – தேசிய நெல் அரிசி வாரியம் தொடங்கப்பட்டது முதல் உள்நாட்டு அரிசியில் இறக்குமதி அரிசி கலப்படம் செய்யும் நடவடிக்கை 1970 ஆம் ஆண்டு முதல் இருந்து வருவதாகவும் இப்போதைய அரசாங்க நிர்வாகத்தில்தான் இது நடந்துவருகிறது என்று கூறமுடியாது என விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2024ஆம் ஆண்டு முதல் நெல் தொழில்துறையில் MycCC எனப்படும் மலேசிய போட்டா போட்டி ஆணையத்தின் ஆய்வின் மூலம் இது தெரியவருவதாக அவர் கூறினார்.
ஆய்வின் விளைவாக, இந்த கலவையின் நோக்கம் உள்ளூர் நுகர்வோரின் ரசனைகளை பூர்த்தி செய்வதோடு சந்தையில் பிராண்ட் மாறுபாடுகளை உருவாக்குவதாகவும் MyCC முடிவு செய்துள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகள் 2024ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதியன்று தேசிய உணவுப் பாதுகாப்புக் கொள்கை மீதான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெற்ற உணவு பாதுகாப்பு கொள்கை மீதான அமைச்சரவை கூட்டம் மற்றும் அமைச்சர்கள் குழு கூட்டத்தை தொடர்ந்து சட்டத்தின் மூலம் உள்ளூர் வெள்ளை அரிசி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி (BPI) ஆகியவற்றைக் கட்டுப்படுத்த சிறந்த முறையில் வழிமுறையைச் செம்மைப்படுத்துமாறு விவசாயம், உணவு பாதுகாப்பு உத்தரவாத அமைச்சிற்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் முகமட் சாபு கூறினார்.
Sungai Besar பெரிக்காத்தான் நேசனல் நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Muslimin Yahaya எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளித்தபோது முகமட் சாபு இந்த தகவலை வெளியிட்டார்.