Latestமலேசியா

எல்லைகள் கடக்கும் அறிவு, இணையும் இருநிலங்கள்: மலேசிய மாணவரின் தமிழ்நாட்டுக் கல்விப் பயணம்

ஈப்போ, செப்-16-Sultan Idris கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (UPSI) வளர்தமிழ் மன்றம் ஏற்பாடு செய்த ‘மலேசிய மாணவரின் தமிழ்நாட்டுக் கல்விப்பயணம்’ செப்டம்பர் 2 முதல் 16ஆம் தேதி வரை நடைபெற்றது. ‘எல்லைகள் கடக்கும் அறிவு, இணையும் இருநிலங்கள்’ என்ற கருப்பொருளிலான இப்பயணத்தில் 24 மாணவர்களும் இரு விரிவுரையாளர்களும் பங்கேற்றனர்.

சென்னைத் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பயணம் தொடங்கியது. சேலம் பெரியார் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களில் இலக்கியக் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் நடைபெற்றன. தமிழக மாணவர்களுடனான அறிவுப் பரிமாற்றம் இருநாட்டு மாணவர்களிடையிலான கல்வி, பண்பாட்டு உறவுகளை வலுப்படுத்தியது. வளர்தமிழ் மன்றத்தின் மதியுரைஞர் இணைப்பேராசிரியர் முனைவர் மனோன்மணி தேவி
அண்ணாமலையும் தமிழக மாணவர்களுக்கு இலக்கண வகுப்பு நடத்தினார்.

 

மேலும், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றைப் பார்வையிட்ட மாணவர்கள், நவீன நூலக வசதிகள் மற்றும் தொழில்நுட்பப் பயன்பாடுகளை அறிந்து கொண்டனர். தஞ்சைப் பெரிய கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட வரலாற்று, ஆன்மிகத் தலங்களுக்கும் சென்றனர். ஊட்டியில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையத்தில் பழங்குடியின மக்களின் பண்பாடு, வாழ்வியல் குறித்தும் அறிந்து கொண்டனர்.

 

இப்பயணத்தின் சமூகப்பணிக் கூறாக அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வுகள் மாணவர்களின் தமிழ் இலக்கியம், இலக்கணம், வரலாறு, பண்பாடு தொடர்பான அறிவை விரிவுபடுத்தியதுடன், சமூகப் பொறுப்பு, தன்னம்பிக்கை, தலைமைத்துவம் மற்றும் பன்னாட்டு நட்புறவையும் வளர்த்தன.

இப்பயணத்தின் நிறைவு விழா சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. அதில் இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் அச்சலிங்கம், ஆதரவளித்த UPSI நிறுவகம், வளர்தமிழ் மன்றத்தின் மேலவை மற்றும் செயலவை உறுப்பினர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் மாணவர்களை வரவேற்று வழிகாட்டிய திரு. ஞானம் குடும்பத்தினர், பேராசிரியர் ஆனந்த கிருஷ்ணன், கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா உள்ளிட்டோருக்கும் நன்றி கூறப்பட்டது.

சென்னையில் மாணவர்களுக்கு உணவு வழங்கி வரவேற்பளித்த தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் எம். சரவணனின் நண்பர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மலேசியா–தமிழ்நாடு இடையிலான கல்வி, பண்பாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்திய இக்கல்விப் பயணம், மாணவர்களின் அறிவையும் அனுபவத்தையும் விரிவுபடுத்தி, அவர்களின் எதிர்காலக் கல்வி மற்றும் சமூகப் பயணத்திற்குப் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!