Latestமலேசியா

பதிவு செய்யப்படாத வழிபாட்டுத் தலத்தில் 16.2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்; எண்மர் கைது

ஷா ஆலாம், அக்-23-சிலாங்கூர், கிள்ளானில் பதிவு செய்யப்படாத வழிபாட்டுத் தலமொன்றில், 16.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அந்த இடம் போதைப்பொருள் சேமிப்புக் கிடங்காகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாக நம்பப்படுகிறது. அங்கு பகுதி நேரமாகப் பணியாற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவ்விவகாரம் அம்பலமானதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் Datuk Shazeli Kahar தெரிவித்தார்.

அக்டோபர் 13 முதல் 19 வரை நடத்தப்பட்ட ஐந்து நடவடிக்கைகளில், நான்கு இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நான்கு போதைப்பொருள் கும்பல்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட அச்சோதனைகளில், ganja, ketamine, திரவ ecstasy, heroin உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

அதேவேளை, நான்கு உள்ளூர் சந்தேக நபர்களிடமிருந்து Honda Accord, Proton Saga கார்கள் உள்ளிட்ட 54,835 ரிங்கிட் பெறுமானமுள்ள சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களுக்கு குற்றக் கும்பல்கள் அல்லது ரகசிய அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுவதாக Shazeli கூறினார்.

19 முதல் 48 வயதுக்குட்பட்ட ஆறு ஆண்கள், இரண்டு பெண்கள் என மொத்தம் எட்டு பேர், 1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் 39B பிரிவின் கீழ் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று வெளிநாட்டு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர். அவர்கள் சமூக வருகை அட்டை மூலம் மலேசியா வந்துள்ளனர். அவர்களுக்கு உள்ளூர் மற்றும் அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பிருக்கலாம் என நம்பப்படுகிறது.

போதைப்பொருட்கள் அண்டை நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு, மலேசியாவிலும் வெளிநாடுகளிலும் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டிருக்கலாம் Shazeli தெரிவித்தார். கைதானவர்களில் ஒருவருக்கு ஏழு குற்றப் பதிவுகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!