Latestமலேசியா

எல்லை தாண்டிய புகைமூட்டம்: மலேசியாவின் உதவியைப் பரிசீலிக்கும் இந்தோனேசியா

கோலாலம்பூர், அக்-14-Sumatra மற்றும் Kalimantanனில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த மலேசியா வழங்க முன்வந்துள்ள உதவியை இந்தோனேசியா கவனமாகப் பரிசீலித்து வருகிறது. அடர்த்தியான புகை பார்வைத்திறனைக் குறைப்பதால், வான்வழித் தீயணைப்பு நடவடிக்கைகளைத் திட்டமிடுவதில் சிக்கல் நிலவுவதாக அது குறிப்பிட்டது.

எந்த வகையான உதவி மிகவும் அவசியம் என்பதைத் தீர்மானிக்க, இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் நிர்வாக மன்றம் தலைமையில் அரசாங்கம் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. உதவ முன்வந்துள்ள மலேசியாவுக்கு நன்றி தெரிவித்த கோலாலம்பூரில் உள்ள இந்தோனேசியத் தூதரகம், கள நிலவரத்தை மதிப்பீடு செய்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் எனக் கூறியது.

எல்லை தாண்டிய புகைமூட்டத்தைக் கட்டுப்படுத்த உதவ மலேசியா முன்வந்துள்ள நிலையில், இந்தோனேசியாவின் பதிலுக்காகக் காத்திருப்பதாகத் துணைப் பிரதமர் Datuk Seri Ahmad Zahid Hamidi கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார். அண்மையில் Jakartaவுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது, இந்தோனேசிய அதிபர் Prabowo Subianto மற்றும் துணை அதிபர் Gibran Rakabuming Raka ஆகியோரிடம் அது குறித்து நேரடியாகத் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

உதவிகள் திறம்பட வழங்கப்படுவதையும், வான்வழி மற்றும் தரைவழிப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதையும் இரு நாடுகளும் விரும்புவதாகத் இந்தோனேசியத் தூதரகம் தெரிவித்தது. அவ்விவகாரம் குறித்து மலேசிய அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் அது குறிப்பிட்டது.

இவ்வேளையில், காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த அதிபர் Prabowo தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதாகத் தூதரகம் தெரிவித்தது. கிடைக்கக்கூடிய வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தவும், அமைச்சுகள், வட்டார அரசாங்கங்கள், பாதுகாப்புப் படைகள் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீ அணைக்கப்பட்ட பின்னரும் சதுப்பு நிலங்களின் அடியில் தீ நீடித்து மீண்டும் பரவும் அபாயம் இருப்பதாகவும் தூதரகம் எச்சரித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!