
கோலாலம்பூர், ஜூன் 18 – இந்த ஆண்டு ஜூலை முதல் அடுத்த ஆண்டு முதல் பாதி வரை நீடிக்கவுள்ள எல் நினோ பருவநிலை மாற்றத்தால், மலேசியாவில் வெப்பநிலை 37.5 செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் அர்த்தூர் ஜோசப் குரூப் (Arthur Joseph Kurup) தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நாட்டில் மழைப்பொழிவு வழக்கத்தை விட 40 விழுக்காடு வரை குறையக்கூடும் என்றும் அவர் கூறினார்.
எல் நினோவின் தாக்கத்தால் விவசாயத் துறை பாதிக்கப்படுவதுடன், அணைகளின் நீர்மட்டம் குறைதல், திறந்தவெளி எரிப்புகள் அதிகரித்தல் மற்றும் புகைமூட்டம் ஏற்படும் அபாயமும் உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் தற்போது மேலும் தீவிரமடைந்து வருவதாகவும், அதைச் சமாளிக்க அரசாங்கம் பல்வேறு பருவநிலை கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.



