
புத்ரா ஜெயா, ஜூன் 18 – மூன்று யானைகள் ஜப்பானுக்கு பரிமாற்றப்பட்டதற்காக , அரசாங்கத்திற்கு அல்லாமல் பல தனிநபர்களுக்கு சுமார் 50 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டதாக ஒரு சுற்றுச்சூழல் தன்னார்வ தொண்டு நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளதுடன், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தும்படி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC யின் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.
இந்தப் பணம் மலேசிய அரசாங்கத்தின் கருவூலத்திற்குச் செல்லவில்லை, மாறாக தனிநபர்களின் பைகளுக்கு இந்தப் பணம் சென்றுள்ளது என்று நம்புகிறோம் என Pertubuhan Pelindung Khazanah Alam Malaysia வின் தலைவரான வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் தெரிவித்தார்.
மொத்தம் எட்டு பேர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு வெளியே நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
இடமாற்றம் செய்யப்பட்ட யானைகள் சிறைப்பிடிக்கப்பட்டு வளர்க்கப்பட்டவை அல்ல, அவை அவை காட்டுப் பகுதியில் பிடிக்கப்பட்டவை.
மேலும் இந்த இடமாற்றத்திற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதில் ஊழல் கூறுகள் இருப்பதால் இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ராஜேஸ் அறைகூவல் விடுத்தார்.
டாரா (Dara ), அமோய் ( Amoi) மற்றும் கெலாட் ( Kelat) ஆகிய மூன்று யானைகளும் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக ஜப்பானின் ஒசாகாவில் உள்ள டென்னோஜி (Tennoji ) உயிரியல் பூங்காவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
இதனிடையே புகார்களைப் பதிவு செய்ய ஒரே நேரத்தில் இருவரை மட்டுமே கட்டிடத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்ற விதிமுறையின் காரணமாக, ராஜேஷ் மற்றும் அவருடன் வந்த பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், இன்று MACC தலைமையகத்திற்கு வெளியே சலசலப்பு ஏற்பட்டது.



