கோலாலம்பூர், நவம்பர்-25, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலானஒற்றுமை அரசாங்கத்தை விட்டு வெளியேற தேசிய முன்னணிக்கு (BN) கவர்ச்சிகரமான வாய்ப்புகள் வந்ததாக, அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி அம்பலப்படுத்தியுள்ளார்.
புத்ராஜெயாவில் புதியக் கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் அம்முயற்சிக்கு ஒப்புக் கொண்டால், பிரதமர் பதவியை BN-னுக்கு விட்டுத் தருவதாகக் கூறினர்.
ஆனால், ஒற்றுமை அரசாங்கப் பங்காளிக் கட்சிகளுக்கு துரோகம் இழைக்க தமக்கு மனம் வரவில்லை என, துணைப் பிரதமருமான சாஹிட் சொன்னார்.
எனினும், சம்பந்தப்பட்ட கட்சிகளின் பெயர்களை அவர் வெளியிடவில்லை.
கடந்த வாரம் கூட சில எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னைச் சந்தித்து, புதிய அரசாங்கத்தை அமைக்கும் திட்டம் பற்றிப் பேசியதாகவும், அது சாத்தியமானால் 4 அமைச்சர் பதவிகளை அவர்கள் கேட்டதாகவும் சாஹிட் கூறிக் கொண்டார்.
அன்வாரும் நானும் சகோதரர்கள் போன்றவர்கள்; எனவே அரசாங்கத்தை விட்டு வந்து விடுவேன் என நினைத்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் என சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டதாக சாஹிட் கூறினார்.
நேற்று கூட்டரசு பிரதேச தேசிய முன்னணியின் 2024-ம் ஆண்டுக்கான மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் அவ்வாறு சொன்னார்.
2022 பொதுத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு எந்தவொரு கட்சிக்கும் போதிய இடங்கள் கிடைக்காமல் தொங்கு நாடாளுமன்றம் உருவானது.
இதையடுத்து அப்போதைய மாமன்னரின் பரிந்துரையின் பேரில், பக்காத்தான் ஹாராப்பானும் தேசிய முன்னணியும் மற்ற கட்சிகளுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்தன.