
கங்கார், ஜூலை-27-பெர்லிஸ், கங்காரில் அரிசி ஆலைக்கு அருகே பழத்தோட்டம் ஒன்றில், சாக்குப் பையில் மண்டை ஓடுடன் கூடிய எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டதை காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் அது மனிதனுடையதா அல்லது விலங்குடையதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
தடயவியல் அறிக்கை கிடைத்த பின்னரே அது தெரிய வரும் என கங்கார் மாவட்ட காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Yusharifuddin Mohd Yusof தெரிவித்தார்.
எலும்புக் கூட்டைக் கண்டறியும் ஆய்வுப் பணிக்கு ஏறக்குறைய இரண்டு வாரங்கள் ஆகலாம். காவல் துறைக்குத் தடயவியல் அறிக்கை தேவை. அதன் முடிவுகளைப் பொறுத்தே அச்சம்பவத்தை விசாரிக்க எந்தச் சட்டப் பிரிவு பயன்படுத்தப்படும் என்பதைத் தீர்மானிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரிசி ஆலைக்கு எதிரே இருந்த பழத்தோட்டத்தில் களைக்கொல்லி தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயி ஒருவர், மோசமாக சிதைந்த நிலையில் இருந்த ஒரு சாக்குப் பையைக் கண்டெடுத்ததாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அந்த சாக்குப் பையில் எலும்புக் கூடு இருந்தது தெரிய வந்தது. அது குறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் கிடைத்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ஆதாரங்களைச் சேகரித்து தடயவியல் பிரிவுக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, அச்சம்பவம் குறித்து ஆரூடங்கள் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு காவல் துறை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.



