சியோல், நவம்பர்-27, தென் கொரியாவில் கட்டாய இராணுவப் பணியிலிருந்து தப்பும் முயற்சியில் வேண்டுமென்றே உடல் எடையை அதிகரித்த இளைஞருக்கு, ஈராண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியா நாட்டு சட்டத்தின் படி, உடல் குறையில்லாத அனைத்து ஆண்களும் 18 முதல் 21 மாதங்களுக்கு கட்டாய இராணுவச் சேவையில் ஈடுபட வேண்டும்.
எனினும், சுகாதாரப் பிரச்னையுடையவர்கள் தங்களது பணியை, சமூகநல மையங்கள், சமூகச் சேவை நிலையங்கள் போன்ற இராணுத் தளம் அல்லாத இடங்களில் மேற்கொள்ள தளர்வு வழங்கப்படும்.
இந்நிலையில், உடல் பருமனாக இருந்தால் இராணுவச் சேவையிலிருந்து தப்பி விடலாமென நண்பர் கொடுத்த யோசனையை நம்பி, 26 வயது இளைஞர் மூன்றே மாதங்களில் 20 கிலோ கிராமுக்கும் கூடுதலாக எடையை அதிகரித்துள்ளார்.
5 அடி 6 அங்குல உயரத்தில், 83 கிலோ கிராம் எடையில் இராணுவப் பயிற்சியை மேற்கொள்ளத் தகுதியானவர் என 2017-ஆம் ஆண்டே உறுதிபடுத்தப்பட்டவர், 2022-2023 இடைபட்ட காலத்தில் தனது உடல் எடையை 102-105 கிலோ கிராமாக உயர்த்தி விட்டார்.
அதற்காக, கலோரி உணவுகளை அதிகம் உட்கொண்டு வந்ததோடு, பார்த்து வந்த பகுதி நேர வேலையையும் விட்டுள்ளார்.
திட்டமிட்டே அச்செயலில் ஈடுபட்டதை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டவருக்கு ஈராண்டு சிறையும், யோசனை கொடுத்துதவிய நண்பருக்கு 6 மாத சிறையும் விதிக்கப்பட்டது.
எனினும், அவ்விளைஞர் எப்படி சிக்கினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.