
சான் டியாகோ, செப்- 22-கலிபோர்னியாவின் Yosemite தேசியப் பூங்காவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரு விமானிகள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்றொரு விமானியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், அவரது அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.
Ostrander ஏரிக்குத் தென்கிழக்கே ஏற்பட்ட காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த இருவரும் தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்த போது, அவர்களை ஏற்றியிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தீயணைப்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் கலிபோர்னியா குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அவ்விருவரையும் சேர்த்து இவ்வாண்டு Colorado, Utah மற்றும் கலிபோர்னியாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழந்த ஹெலிகாப்டர் விமானிகளின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. இவ்வாண்டில் இதுவரை அமெரிக்காவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியின் போது குறைந்தது 18 பேர் பலியாகியுள்ளனர்.
அசாதாரணமாகக் குறைந்த குளிர்காலப் பனிப்பொழிவு, கடும் வெப்பநிலை மற்றும் பல தசாப்தங்களாக நீடித்து வரும் வறட்சி ஆகியவற்றின் காரணமாக அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் காட்டுத் தீ பரவி வருவது குறிப்பிடத்தக்கது.



