Latestமலேசியா

காஜாங் சிறையில் தாக்கப்பட்ட கைதி மரணம்; நியாயம் கேட்டு கதறும் குடும்பம்

காஜாங், ஏப்ரல்-14-காஜாங் சிறையில் சக கைதிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த 51 வயது முனியாண்டி முருகையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாதுகாப்பு என நம்பித் தன் கணவரைப் போலீஸில் ஒப்படைத்த மனைவிக்கு, இப்போது அவரது உடல் தான் கிடைத்துள்ளது.

கடந்த ஜனவரியில் 7 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முனியாண்டி, ஜூலை மாதம் விடுதலையாகவிருந்த நிலையில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.

சிறை அதிகாரிகளின் அஜாக்கிரதையும் அலட்சியமுமே தன் கணவரின் மரணத்திற்குத் தார்மீகப் பொறுப்பு என அவரது மனைவி மீனாம்பிகை ரத்னம் குற்றம் சாட்டுகிறார்.

நேற்று பிற்பகல் 2.30 மணி வரைக்கும் தாங்கள் மருத்துவமனையில் இருந்த நிலையில், வீட்டுக்குச் சென்ற பிறகு 3.30 மணிக்கு தந்தை இறந்து விட்டதாக மகள்கள் செல்வரானி மற்றும் அபிராமிக்கு தகவல் கிடைத்துள்ளது.

இப்போது கிருமி பாதிப்பால் தந்தை இறந்து விட்டதாகக் கூறுகிறார்கள்; ஆனால் லாக்கப்பில் அடிக்கப்பட்டதாலேயே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; ஆக, மரணத்திற்கான காரணத்தை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என அவர்கள் சோகத்துடன் கூறினர்.

முனியாண்டியின் மரணத்தை ஒரு சாதாரண மரணமாகக் கருதாமல், முறையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும் என குடும்பத்தார் வலியுறுத்தி வருகின்றனர்.

சட்டத்தை மதித்துத் தன் கணவரை போலீஸில் பிடித்துகொடுத்து சிறைக்கு அனுப்பிய ஒரு பெண்ணுக்கு, அவர் உயிரற்ற உடலாக திரும்புவார் என்பது கடும் வேதனையே…

இந்நிலையில், அதிகாரத் தரப்பிலிருந்து தக்க விளக்கமும் பதிலும் வருமென எதிர்பார்ப்போம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!