
கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 – நாட்டில் காற்றின் தரம் மேம்பட்டு வரும் நிலையில், இன்று காலை 7.30 மணி நிலவரத்தின்படி சரவாக்கில் மூன்று பகுதிகளும் கோலாலம்பூரில் ஒரு பகுதியும் உட்பட மொத்தம் நான்கு இடங்களில் காற்றின் தரம் (IPU) ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.
மலேசிய காற்றுத் தரக் கண்காணிப்பு அமைப்பான APIMS தரவின்படி, சரவாக்கில் சமரஹான் (Samarahan) 164 என்ற அதிகபட்ச IPU பதிவைப் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து செரியான் மாவட்ட காவல்துறை தலைமையகம் 162, ஸ்ரீ அமான் 155 என்ற அளவில் பதிவாகின. கோலாலம்பூர் செராஸ் பகுதியில் IPU 129 ஆக இருந்தது.
நாடு முழுவதும் 61 கண்காணிப்பு நிலையங்கள் மிதமான நிலையில் பதிவாகியுள்ளன. இரண்டு நிலையங்கள் நல்ல நிலையில் இருந்ததுடன், மிகவும் ஆரோக்கியமற்ற அல்லது ஆபத்தான நிலையில் எந்த நிலையமும் பதிவாகவில்லை.
மலேசிய சுற்றுச்சூழல் துறையின் அதிகாரப்பூர்வ தளங்கள் மற்றும் MyJAS EQMS செயலி மூலம் பொதுமக்கள் காற்றின் தரம் குறித்த சமீபத்திய தகவல்களைப் பெறலாம்.



