Latestமலேசியா

சொத்து விவரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அறிவிக்கத் தவறியது: குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி

கோலாலம்பூர், ஆகஸ்ட்-27-தமது சொத்து விவரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACCயிடம் அறிவிக்கத் தவறியதாகத் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

உள்ளூர் மற்றும் ஒன்பது வகையான வெளிநாட்டு நாணயங்கள், ஐந்து தங்கக் கட்டிகள் ஆகியவற்றை அறிவிக்கத் தவறியதாக அவர் மீது கோலாலம்பூர் sesyen நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. முறையாக அறிவிக்கப்படாத நாணயங்களில் 14.7 மில்லியன் ரிங்கிட், 6 மில்லியன் சிங்கப்பூர் டாலர், 1.46 மில்லியன் அமெரிக்க டாலர், 3 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள், 12.2 மில்லியன் யூரோ, ¥363 மில்லியன், £50,250, NZ$44,600, 34.8 மில்லியன் திர்ஹம்கள், 352,850 ஆஸ்திரேலிய டாலர் ஆகியவையும் அடங்கும்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் பிரிவு 36(2)-ன் கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், அதனை மறுத்த இஸ்மாயில் சப்ரி விசாரணை கோரினார்.

சொத்து விவரங்கள் குறித்து உறுதிமொழி அல்லது சத்தியப் பிரமாணத்துடன் கூடிய எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தை அளிக்குமாறு MACC பிறப்பித்த அறிவிப்பு நிபந்தனைகளை வேண்டுமென்றே புறக்கணித்தது அல்லது நிறைவேற்றத் தவறியது ஆகிய குற்றத்தை பிரிவு 36(2) உள்ளடக்கியிருக்கிறது.

குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால், இஸ்மாயில் சப்ரிக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அதிகபட்சமாக 100,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!