Latestமலேசியா

மனித உருவிலான வரைபடக் கட்டமைப்பு பாதுகாப்பாகவே இருக்கிறது: ஃபஹ்மி ஃபாட்சீல்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 28-தேசிய தினக் கொண்டாட்டங்களின் போது மனித உருவக் காட்சிக்காகப் பயன்படுத்தப்படும் அடுக்குக் கட்டமைப்பு பாதுகாப்பானது என தகவல், தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபஹ்மி ஃபாட்சீல் தெரிவித்திருக்கிறார். அது லேசாக அசைவது அதன் வடிவமைப்பில் உள்ள நெகிழ்வுத்தன்மையே காரணம். மாணவர்களின் அசைவுகள் தாளத்திற்கு ஏற்ப இருப்பதால், கட்டமைப்பில் குறிப்பிட்ட அளவு நெகிழ்வுத்தன்மை அவசியம் என அவர் கூறினார். கட்டமைப்பு லேசாக அசைவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து அமைச்சர் அது குறித்து அவ்வாறு விளக்கினார்.

கட்டமைப்பின் நிலைத்தன்மையையும் மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதிச் செய்ய மறுஆய்வு செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளைத் தாம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இத்தகைய கட்டமைப்பு பயன்படுத்தப்படுவது மூன்றாவது முறையாகும். இதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதால் ஐயம் கொள்ளத் தேவையில்லை என்றாரவர்.

இதனிடையே, மனித உருவக் காட்சி வரைபடம் மையத்திலிருந்து விலகியிருப்பது போல் சில கோணங்களில் தோன்றுவதற்கு, கட்டிடமும் அணிவகுப்பும் ஒரே நேர்க்கோட்டில் அமையாததே காரணம் என்றும் ஃபஹ்மி விளக்கினார். இந்தச் சமச்சீரற்ற தோற்றத்தைக் குறைக்க எதிர்காலத்தில் சிறிய மாற்றங்களைச் செய்யக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பங்கேற்றதால் இந்த வித்தியாசம் அதிகம் தெரியவில்லை. இவ்வாண்டு பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 2,000-லிருந்து 1,500-ஆகக் குறைக்கப்பட்டதால் அது தெளிவாகத் தெரிவதாகவும் ஃபஹ்மி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!