Latestமலேசியா

வெளிநாட்டுத் தொழிலாளர் ஒதுக்கீடு விவகாரம்: RM1.097 மில்லியன் லஞ்சம் பெற்றதாக சரவணன் மீது 3 குற்றச்சாட்டுகள்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 28 — வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான 1,000 ஒதுக்கீடுகளை அங்கீகரித்தது தொடர்பில், மொத்தம் 10 லட்சத்து 97 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக, முன்னாள் மனிதவள அமைச்சரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் மீது இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

58 வயதான சரவணன், நீதிபதி அசுரா அல்வி முன்னிலையில் மூன்று குற்றச்சாட்டுகளும் தனித்தனியாக வாசிக்கப்பட்ட பின்னர், அவற்றை மறுத்து விசாரணை கோரினார்.

முதல் குற்றச்சாட்டின்படி, Vectica Resources Sdn Bhd நிறுவனத்தின் இயக்குநரான 65 வயது Tan Teck Lim என்பவரிடமிருந்து, Syed Amirul Syed Ahmad வழியாக 150,000 ரிங்கிட் ரொக்கத்தை சரவணன் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

2022 ஜூன் 16-ஆம் தேதி Bukit Jalil Golf & Country Resort-இல் இந்தப் பணத்தை அவர் பெற்றதாகக் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது குற்றச்சாட்டின்படி, அதே Tan Teck Lim-இடமிருந்து Syed Amirul வழியாக மேலும் 350,000 ரிங்கிட் ரொக்கத்தை சரவணன் பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பணம் 2022 ஜூலை 7-ஆம் தேதி பங்சார், Jalan Telawi 3-இல் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த இரண்டு ரொக்கப் பரிவர்த்தனைகளும், அப்போது மனிதவள அமைச்சராக இருந்த சரவணன், TYKB Engineering Sdn Bhd நிறுவனத்திற்கான 1,000 வெளிநாட்டுத் தொழிலாளர் ஒதுக்கீட்டு விண்ணப்பத்தை அங்கீகரிப்பதற்கான தூண்டுதலாகவும் பிரதிபலனாகவும் பெற்றதாக அரசுத் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

மூன்றாவது குற்றச்சாட்டின்படி, அதே நோக்கத்திற்காக Tan Teck Lim-இடமிருந்து மேலும் 597,000 ரிங்கிட் பெற்றதாக சரவணன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த 597,000 ரிங்கிட் தொகை காசோலை மூலமாக Big Seven Ventures Sdn Bhd நிறுவனத்துக்குச் சொந்தமான வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரிவர்த்தனை 2022 ஜூலை 7-ஆம் தேதி தாமான் தேசா, Jalan Klang Lama-வில் உள்ள Maybank Islamic கிளையில் இடம்பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, முதல் இரண்டு குற்றச்சாட்டுகளில் மொத்தம் 500,000 ரிங்கிட் ரொக்கமாகவும், மூன்றாவது குற்றச்சாட்டில் 597,000 ரிங்கிட் காசோலை மூலமாகவும் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மூன்று குற்றச்சாட்டுகளிலும் சம்பந்தப்பட்ட மொத்தத் தொகை 10 லட்சத்து 97 ஆயிரம் ரிங்கிட் அல்லது RM1.097 மில்லியன் ஆகும்.

சரவணன் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-ன் பிரிவு 16(a)(B) கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதே சட்டத்தின் பிரிவு 24(1)-ன் கீழ் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், லஞ்சத் தொகையின் குறைந்தது ஐந்து மடங்கு அல்லது 10,000 ரிங்கிட் — இதில் எது அதிகமோ அந்தத் தொகை அபராதமாகவும் விதிக்கப்படலாம்.

இதற்கிடையில், தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சரவணன் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

மனிதவள அமைச்சராக 2020 மார்ச் முதல் 2022 நவம்பர் வரை பதவி வகித்த காலத்தில், வெளிநாட்டுத் தொழிலாளர் தருவிப்பு நடவடிக்கைகள் வெளிப்படையான முறையிலேயே மேற்கொள்ளப்பட்டதாக அவர் முன்னதாக தெரிவித்திருந்தார்.

மேலும், எந்த முதலாளியிடமிருந்தும் தாம் பணம் பெற்றதில்லை என்றும், வெளிநாட்டுத் தொழிலாளர் தருவிப்பு தொடர்பான எந்த முறைகேட்டிலும் தாம் ஈடுபடவில்லை என்றும் சரவணன் கூறியிருந்தார்.

தமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மூன்றாம் தரப்பினரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டவை எனக் கூறிய சரவணன், நீதித்துறை மீது முழு நம்பிக்கை இருப்பதாகவும் உண்மை வெளிவரும் என்றும் தெரிவித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!