
கோலாலம்பூர், ஆகஸ்ட்-27,உலகப் பெருங்கடல்களின் மேற்பரப்பு வெப்பநிலை கடந்த 125,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இவ்வாண்டு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாகப் பருவநிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தீவிரமடைந்துள்ள ‘எல் நினோ’ தாக்கம் மற்றும் புவி வெப்பமயமாதல் காரணமாகக் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியாக 21 பாகை செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.
வழக்கமான மார்ச், ஏப்ரல் மாதங்களைத் தாண்டியும் இந்த வெப்பம் நீடித்து வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் Copernicus பருவநிலை மாற்ற சேவை மற்றும் NOAA அமைப்பின் தரவுகளின்படி, 1990-களுக்குப் பிறகு கடல் வெப்ப அலைகள் 3 மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.
அதோடு, உலகின் 40 விழுக்காட்டுக்கும் அதிகமான பெருங்கடல்கள் தீவிர வெப்ப அலைகளின் பிடியில் உள்ளன.
இப்படி பெருங்கடல்கள் அதிகளவில் வெப்பமடைவது வளிமண்டலக் கரியமில வாயுவை உறிஞ்சும் திறனைக் குறைப்பதுடன், தீவிரப் புயல்கள் மற்றும் பெருவெள்ளம் போன்ற பேரிடர்களை உலகளவில் உருவாக்கும் அபாயத்தை அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.



