
அலோர் ஸ்டார், ஆகஸ்ட்.26-கெடாவில் 2023 ஆம் ஆண்டு முதல் சூதாட்ட நிலையங்களுக்கான உரிமங்களை வழங்குவது, புதுப்பிப்பது நிறுத்தப்பட்ட நிலையில், அக்கொள்கை தங்களுக்குப் சிக்கலைக் கொண்டு வரலாம் என மாநில மந்திரி பெசார் ஒப்புக் கொண்டுள்ளார்.
அந்நடவடிக்கையால் சூதாட்ட நிலையங்களின் நடத்துநர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இழப்பீட்டுக் கோரிக்கைகள் வரலாம் என்பதை நிராகரிக்க முடியாது. எனினும், பாதிக்கப்பட்ட நடத்துநர்கள் இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்தால், அதனை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் தயார் என டத்தோ ஶ்ரீ முஹமட் சனுசி நோர் தெரிவித்தார்.
சூதாட்ட நிலையங்களின் நடத்துநர்கள் கோரும் இழப்பீட்டுத் தொகை முதலில் நிரூபிக்கப்பட வேண்டும். அதற்காக உள்நாட்டு வருவாய் வாரியமான LHDN-க்கு அறிவிக்கப்பட்ட வருமானப் பதிவுகளும் பரிசீலிக்கப்படலாம். கெடாவில் செயல்பட்ட காலம் முழுவதும் அவர்கள் உண்மையான வருமானத்தை LHDN-க்கு அறிவித்தார்களா இல்லையா என்பதே கேள்விதான்.
அறிவிக்கவில்லை என்றால், அவர்களின் இழப்பீட்டுக் கோரிக்கையை முறியடிப்பது எளிதாக இருக்கும் என சனுசி விளக்கினார்.
சூதாட்ட நிலையங்கள் ஒருவேளை அறிவித்திருந்தால், அவர்கள் எவ்வளவு வருமானத்தை ஈட்டினார்கள் என்பது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும். சூதாட்ட நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக மாநில அரசின் பணத்தை தன்னிச்சையாகப் பயன்படுத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டை மாநில அரசு தொடர்ந்து பாதுகாக்கும் என்றும் சனுசி உறுதியாகக் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி, சூதாட்ட நிலையங்களுக்கான வணிக உரிமங்களை வழங்குவதையும் புதுப்பிப்பதையும் நிறுத்திய மாநில அரசின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கில், மேல்முறையீட்டைத் தொடர அனுமதி கோரி மாநில அரசு செய்த மனுவை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.



