
ஹாம்பர்க், ஆகஸ்ட்.26- வட ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடைபெற்ற கண்காட்சியொன்றில், ஊஞ்சல் சவாரியின் போது ஏற்பட்ட கோளாறினால் சிக்கித் தவித்த 23 பேர் சுமார் மூன்று மணி நேரங்களுக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த ஊஞ்சல் அந்தரத்தில் நின்றதாக ஜெர்மன் செய்தி நிறுவனம் (dpa) தெரிவித்தது.
பயணிகள் தரையிலிருந்து சுமார் 30 மீட்டர் உயரத்தில் இருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது. சிக்கிக் கொண்டவர்களுக்கு உதவவும் பதற்றத்தைத் தடுக்கவும் தீயணைப்புத் துறையுடன் இணைந்து பெரிய அளவிலான மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக காவல்துறை கூறியது. மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அந்த ஊஞ்சல் வெற்றிகரமாக மீண்டும் இயக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் எவ்விதப் பாதிப்புமின்றி கீழே இறங்கியதாக காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். அச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த ஊஞ்சல் சவாரி, ஹாம்பர்க்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் Sommerdom கண்காட்சியின் ஒரு பகுதியாகும். இதற்கு முன் நான்கு வாரங்களுக்கு நடைபெற்ற அந்நிகழ்வு, இவ்வாண்டு முதல் முறையாக ஐந்து வாரங்களுக்கு நடைபெறுகிறது.



