Latestமலேசியா

மந்திரி பெசாரின் உறுதிமொழி, நிலுவையில் சிவில் வழக்கு இருந்தபோதும் கங்கார் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் இடிக்கப்பட்டது – கோவில் நிர்வாகம்

கங்கார், ஆகஸ்ட்.26-பெர்லிஸ், கங்காரில் உள்ள ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் இடிக்கப்பட்டது பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே நிலவிய சிக்கலைத் தீர்க்க இவ்வாண்டு இறுதி வரை கால அவகாசம் வழங்கப்படும் என பெர்லிஸ் மாநில அரசு உறுதியளித்திருந்த நிலையில், அக்கோயில் திடீரென இடிக்கப்பட்டிருப்பது என்ன நியாயம் என அதன் நிர்வாகக் குழுவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கோயிலை வேறு இடத்திற்கு மாற்றுவதில் பிரச்னையில்லை. ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன், பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்வது குறித்து மாநில அரசுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்த விரும்பியதாக அது கூறியது. மாநில மந்திரி பெசார் Abu Bakar Hamzahவைத் தாங்கள் பலமுறை சந்தித்ததாகவும், பேச்சு வார்த்தைகள் தொடரும் என்று அவர் உறுதியளித்திருந்ததாகவும் அக்குழுத் தலைவர் பி. சதீஷ் குமார் தெரிவித்தார்.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகள் தொடர்வதால், டிசம்பர் 31-ஆம் தேதி வரை கோயில் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என ஜூலை 14-ஆம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் Abu Bakar உறுதியளித்ததாகவும் அவர் கூறினார். அது தொடர்பான காணொளியையும் அக்குழு காண்பித்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 20 ஆம் தேதி கனரக இயந்திரங்களுடன் அமலாக்க அதிகாரிகள் கோயில் கட்டிடத்தை இடித்துத் தள்ளியது அதிர்ச்சியளிப்பதாக சதீஷ் குமார் FMTயிடம் குறிப்பிட்டார்.

இடிப்பு நடவடிக்கை நடந்த சமயம் Abu Bakarரைத் அபு பக்கரைத் தொடர்பு கொண்ட போது, அமலாக்க நடவடிக்கை நடைபெறுவது தமக்குத் தெரியாது என பதிலளித்ததாக அவர் கூறினார். கோவில் இடிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன் அவ்விவகாரம் தொடர்பில் பெர்லிஸ் அரசு, கங்கார் நில அலுவலகம் மற்றும் கங்கார் நகராட்சி மன்றம் ஆகியவற்றுக்கு எதிராக கோவில் நிவாகக் குழு ஒரு சிவில் வழக்கைத் தாக்கல் செய்திருந்தது. இருப்பினும், அமலாக்க அதிகாரிகள் அங்கு வந்த போது, இடிக்கும் நடவடிக்கையைத் தடுப்பதற்கான நீதிமன்ற உத்தரவு தங்களுக்குக் கிடைத்திருக்கவில்லை என சதீஷ் குமார் விளக்கினார்.

அக்கோயில் கைவிடப்பட்ட ஒரு கட்டிடம் அல்ல. பல ஆண்டுகளாக அங்கு தினசரி வழிபாடுகளும் நடைபெற்று வந்தன. கோயிலின் நிலை குறித்து பெர்லிஸ் மாநில அதிகாரிகளுடன் பல தசாப்தங்களாக பேச்சு வார்த்தை இருந்ததாகவும் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ள முன்னதாகவே அனுமதி பெற்றிருந்ததாகவும் சதீஷ் குறிப்பிட்டார்.

அனுமதியின்றி அரசு நிலத்தில் அக்கோயில் அமைந்திருந்ததாகவும், பல ஆண்டுகளாக அறிவிப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடனான பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னரே அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மாநில அரசு இதற்கு முன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!