
கோலாலம்பூர், அக்டோபர்-10,
உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் மலாய் சமூகத்தினர், மலேசியாவின் கலாச்சார அரசதந்திரத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்ற முடியும் என தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் தெரிவித்துள்ளார்.
மலாய் மொழி, கலை, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை அனைத்துலக அளவில் பரப்புவதற்கு வெளிநாடுவாழ் மலாய் சமூகத்தினர் பெரும் பலமாக விளங்குவதாக அவர் கூறினார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற 2026 அனைத்துலக மலாய் புலம்பெயர் சமூகத்தினர் கருத்தரங்கைத் தொடக்கி வைத்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கங்களுக்கு இடையே அதிகாரப்பூர்வ அரசதந்திர உறவுகளை ஏற்படுத்தும் நிலையில், கலாச்சார அரசதந்திரம் மக்களை ஒன்றிணைப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலியாவின் கோகோஸ் (Cocos) தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்காவின் கேப் (Cape) மலாய் சமூகத்தினர், பல நூற்றாண்டுகளாகத் தங்களது மலாய் கலாச்சார அடையாளங்களைப் பாதுகாத்து வருவதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இத்தனை இருந்தும், உலகளவில் வாழும் மலாய் வம்சாவளியினரின் எண்ணிக்கையைத் துல்லியமாகப் பதிவுச் செய்யும் விரிவான தரவுத்தளம் இன்னும் இல்லை என அவர் குறைப்பட்டுக் கொண்டார்.
ஐநா சபையின் 2020ஆம் ஆண்டு தரவுகளின்படி, உலகம் முழுவதும் 1.86 மில்லியன் மலேசியர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர்.
எனினும், இந்த எண்ணிக்கை மலாய் சமூகத்தினரை மட்டும் குறிக்கவில்லை என ஏரன் தெளிவுப்படுத்தினார்.
இவ்வேளையில், ஏழாம் நூற்றாண்டில் ஸ்ரீ விஜயா பேரரசு காலத்திலிருந்தே மலாய் மொழி, தொடர்பு மற்றும் நிர்வாக மொழியாக நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கூட்டரசு அரசியலமைப்பின் 152-ஆவது பிரிவின் கீழ் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மலாய் மொழியின் இலக்கிய மரபுகளைப் பாதுகாக்க, அரிய கையெழுத்துப் பிரதிகள், அச்சு நூல்கள் மற்றும் மின்னிலக்க ஆவணங்களைப் பராமரிக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாகவும் ஏரன் தெரிவித்தார்



