
தானா மேரா, நவ.24-கிளந்தானில் மியன்மாரைச் சேர்ந்த ஒன்பது புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற Hyundai Santa Fe கார், காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது Kampung Alor Pasirரில் சறுக்கி விபத்துக்குள்ளானது. அச்சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்தது.
Pasir Mas, Kampung Repek பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொது நடவடிக்கைப் படையினர், சந்தேகத்திற்கிடமாகச் சென்ற காரை நிறுத்த முயன்றனர். ஆனால், ஓட்டுநர் வேகத்தை அதிகரித்துத் தப்பிக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர வீட்டின் அருகே சறுக்கிச் சென்றது.
காரை 34 வயதுடைய நபர் ஓட்டியதாகவும், அதில் 18 முதல் 47 வயதுக்குட்பட்ட நான்கு பெண்களும், ஐந்து ஆண்களும் இருந்ததாகவும் தானா மேரா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் Mohd Haki Hasbullah தெரிவித்தார். அவர்களிடம் முறையான பயண ஆவணங்கள் இல்லை. மேலும், ஓட்டுநர் மீது போதைப்பொருள் தொடர்பான ஒன்பது மற்றும் பிற தவறுகள் தொடர்பான மூன்று குற்றப்பதிவுகள் இருப்பது தெரியவந்தது.
கார், கைப்பேசி மற்றும் சாவி ஆகியவற்றைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அச்சம்பவம் 1959/63ஆம் ஆண்டு குடிநுழைவு சட்டத்தின் 55E மற்றும் 6(1)(c) பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



