
அலோர் காஜா: உணவக உரிமையாளர்களை மிரட்டி, வணிக வளாகங்களைச் சேதப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் எட்டு ஆண்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அலோர் காஜா மாவட்டக் காவல் தலைவர் சூப்பிரிண்டெண்டன் அகமது அபு பக்கார் (Superintendan Ahmad Abu Bakar) கூறுகையில், மஸ்ஜித் தானா மற்றும் கோலா சுங்கை பாரு (Masjid Tanah dan Kuala Sungai Baru) பகுதிகளில் உள்ள மூன்று உணவகங்களை இலக்காகக் கொண்டு மிரட்டல் மற்றும் சேதப்படுத்துதல் சம்பவங்கள் தொடர்பாக ஐந்து புகார்கள் கிடைத்ததாகத் தெரிவித்தார்.
உணவகங்களின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றும், அதற்கு இணங்காவிட்டால் கடைகளைச் சேதப்படுத்துவோம் என்றும் அந்தக் கும்பல் மிரட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, 30 முதல் 46 வயதுக்குட்பட்ட எட்டு ஆண்கள், மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் 506 மற்றும் 427ஆவது பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்படுவதாகவும், விசாரணைக்கு உதவும் வகையில் நவம்பர் 25ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.



