
கோலாலம்பூர், அக்டோபர்-10,
மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மானும், பிரபல பாடகியும் நடிகையுமான பெல்லா அஸ்தில்லாவும் இன்று காலை திருமணம் செய்துகொண்டனர்.
கோலாலம்பூரில் உள்ள Menara Merdeka Maybank கோபுரத்தின் 118-ஆவது மாடியில் நடைபெற்ற திருமணச் சடங்கில், 34 வயது சையிட் சாடிக் ஒரே முறை லஃபாஸ் சம்மதம் கூறி 32 வயது பெல்லாவைத் தனது மனைவியாக ஏற்றுக்கொண்டார்.
காலை சுமார் 10.40 மணிக்கு நடைபெற்ற திருமணத்தை, பிரதமர் துறையின் முன்னாள் சமய விவகார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்லி முகமட் அல்-பக்ரி நடத்தி வைத்தார்.
திருமணத்தின்போது, சையிட் சாடிக் 500 ரிங்கிட்டை mas kahwin எனப்படும் திருமண வரதட்சணையாக வழங்கியதுடன், 7 தட்டுகளில் சீர்வரிசைப் பொருட்களையும் வழங்கினார்.
மணமகள் தரப்பிலிருந்து 9 தட்டுகளில் சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
அரேபிய மற்றும் இஸ்லாமிய பாரம்பரியத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற திருமணத்தில், மணமக்கள் இருவரும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்திருந்தனர்.
குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட சுமார் 300 பேர் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
பிரதமரின் துணைவியார் டத்தோ ஸ்ரீ Dr வான் அஸிசா வான் இஸ்மாயில், முன்னாள் பிரதமர்கள் தான் ஸ்ரீ முஹிடின் யாசின், டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யிக்கோப், முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் உள்ளிட்டோரும் அவர்களில் அடங்குவர்.
கடந்த மார்ச் 28-ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்துகொண்ட இத்தம்பதியினர், இன்று அதிகாரப்பூர்வமாக இல்லற வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.
இதனிடையே, அக்டோபர் 25-ஆம் தேதி ஜோகூர், மூவாரிலும், அக்டோபர் 31-ஆம் தேதி சபா, கோத்தா கினாபாலுவிலும் பொதுமக்களுக்கான திருமண விருந்துகள் நடைபெறவுள்ளன.



