
சென்னை, அக்டோபர்-10,
தமிழகத்தில் நடைபெற்ற இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் – TVK வெற்றிப் பெற்றுள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளர் மரகதம் குமரவேல், திமுக வேட்பாளர் பரந்தாமனை சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அதேவேளை, தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சத்தியபாமா, திமுக வேட்பாளர் சுகன்யாவை 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் தமிழக சட்டமன்றத்தில் TVK-வின் பலம் 109 இடங்களாக உயர்ந்துள்ளது.
ஏப்ரல் மாத சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர்களே இந்த இரு பெண் வேட்பாளர்களும் ஆவர்; பின்னர் TVK-வில் இணைவதற்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனால் அங்கு இடைத்தேர்தல் உருவாகி, அவர்களையே TVK வேட்பாளர்களாக விஜய் அறிவித்தார்.
மக்களின் தீர்ப்பை மதிக்காமல் கட்சி மாறி, இடைத்தேர்தலைத் திணித்ததாக எதிர்கட்சிகள் கடும் பிரச்சாரம் செய்தன; பிரச்சாரத்தின் போது இரு வேட்பாளர்களும் வாக்காளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பைச் சந்தித்தனர்.
ஆனால், அனைத்தையும் மீறி TVK மகத்தான வெற்றிப் பெற்றுள்ளது.
தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துரைத்த முதலமைச்சர் விஜய், இது தனிப்பட்ட முறையில் தனக்கோ, தமிழக வெற்றிக் கழகத்திற்கோ கிடைத்த வெற்றி அல்ல என்றார்.
மாறாக, பெண்களுக்கு எதிரான அவதூறு பேச்சுகள், தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அரசியல் துரோகங்களுக்கு எதிராக மக்கள் அளித்த பதிலடி என அவர் வருணித்தார்.
மேலும், பணபலத்தை நம்பாமல், மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று இந்த வெற்றியைப் பதிவு செய்திருப்பதாக விஜய் தெரிவித்தார்.
இதனிடையே, தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துரைத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இது துரோகத்திற்குக் கிடைத்த தற்காலிக வெற்றி என விமர்சித்துள்ளார்.
பொய்யான பிம்பங்களை அடிப்படையாகக் கொண்ட அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.
2 தொகுதிகளும் அதிமுக கோட்டையாக இருந்த நிலையில், இரண்டிலுமே அக்கட்சி தோல்வி கண்டாலும், அதிமுக மீண்டு வரும் என அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.



