Latestமலேசியா

பண்டார் புக்கிட் திங்கி LRT வாகன நிறுத்துமிடத்தில் பயணியின் காரிலிருந்து சக்கரங்கள் களவாடப்பட்டன

கிள்ளான், ஆகஸ்ட்.26- சிலாங்கூர், கிள்ளான், பண்டார் புக்கிட் திங்கி LRT ரயில் பயணம் பெண் ஒருவருக்கு பயங்கரக் கனவாக மாறியுள்ளது. Nani Jismani எனும் அப்பெண் அச்சம்பவம் குறித்து சமூக ஊடகத்தில் அண்மையில் பதிவேற்றியிருந்தார். ஒருநாள் வேலை முடிந்து அந்த LRT நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த தனது காருக்குத் திரும்பிய போது, இரு சக்கரங்கள் இல்லாமல் கார் கான்கிரீட் கட்டைகளின் மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு தாம் அதிர்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்ட அவர் அது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.

காருக்குத் திரும்பிய போது அங்கு கண்ட காட்சி தம்மை அதிர்ச்சியடைய வைத்ததாகக் குறிப்பிட்ட அவர், அப்பகுதியைக் காவல் காக்க யாரும் இல்லையா என கேள்வி எழுப்பியிருந்தார். மிகவும் கவனமாக இருக்குமாறு அவர் அங்கு வாகனங்களை நிறுத்தி வைப்போருக்கு ஆலோசனையும் கூறியிருந்தார்.

இரு டயர்கள் மட்டுமே திருடப்பட்டன. முன் இடது டயரையும் திருட முயற்சி நடந்துள்ளது. ஆனால் அதன் வீல் ஸ்டட்கள் உடைந்து விட்டன. அதோடு பொருட்களை உள்ளே வைக்க தாம் காரின் கதவைத் திறந்ததால், அது திறந்தே இருந்தது என அப்பெண் கூறியிருந்தார்.
தமது காரில் சாதாரண ரிம்கள் மட்டுமே பொருத்தப்பட்டிருந்ததாகவும், அதில் டாஷ்கேம் பொருத்தப்பட்டிருந்தாலும், அது பதிவு ஏதும் செய்யவில்லை எனவும் Nani குறிப்பிட்டிருந்தார்.

இவ்வேளையில் அவரது அப்பகிர்வு குறித்து இணையவாசிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். பாதுகாப்பு வசதிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே கார் நிறுத்தப்பட்டிருந்த போதிலும், சற்று தரமான sports rims பொருத்தப்பட்ட தனது காரின் நான்கு டயர்களும் திருடப்பட்டதாக அவர்களில் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே கடந்த 20 ஆம் தேதி வெளியிட்ட மற்றொரு பதிவில், அத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக Nani உறுதிப்படுத்தினார். அந்நபர் அந்த ‘ரிம்ஸ்’-களை விற்று விட்ட போதிலும், திருடப்பட்ட டயர்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சம்பவம் நடந்த நாளில் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட Nani, இழப்பீடு தொடர்பில் கார் நிறுத்துமிட நிர்வாகத்துடன் பேசி வருவதாகக் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!