ஜோகூர் பாரு, அக்டோபர்-3, கால்பந்தாட்டங்களில் பரஸ்பர மரியாதையும் களத்திற்கு வெளியே ஒற்றுமையும் மிகவும் முக்கியமாகும்.
திடலில் எப்படி அடித்துகொண்டாலும் அங்கேயே அது முடிந்து விட வேண்டும்.
திடலுக்கு வெளியிலும் சர்ச்சைகள் தொடரக் கூடாது என, சிலாங்கூர் சுல்தான் மற்றும் ஜோகூர் இடைக்கால சுல்தான் இருவருக்குமிடையில் அந்த இணக்கம் காணப்பட்டது.
மக்களின் ஒற்றுமை, தொழில்தர்மம் காக்கப்படுவது, மற்றும் நாட்டின் அடையாளமாகத் திகழும் ஆட்சியாளர்கள் ஐக்கியத்தின் அவசியத்தையும் இருவர் வலியுறுத்தினர்.
சுல்தான் ஷாராஃபுடின் ஷா சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் புரவலர் ஆவார்.
அதே சமயம் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் JDT அணியின் உரிமையாளராவார்.
உள்ளூர் கால்பந்தரங்கின் இருபெரும் வைரிகளாகத் திகழும் Selangor FC – JDT இடையில் அவ்வப்போது உரசல்கள் நிகழ்ந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே.
அதிலும் குறிப்பாக, கடந்த ஜூன் மாதம் JDT-க்கு எதிரான Community Shield கால்பந்தாட்டத்தில் பங்கேற்பதிலிருந்து கடைசி நேரத்தில் சிலாங்கூர் விலகியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
அம்முடிவால் சிலாங்கூருக்கு அபராதம் விதிக்கப்பட்டதும், அதனை சிலாங்கூர் சுல்தான் கண்டித்ததும், ஜோகூர் TMJ சமூக ஊடகத்தில் பதிலடி கொடுத்ததுமாக விவகாரம் பெரிதானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட இருவருமே நேரில் சந்தித்து சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதால், இரு தரப்பு இரசிகர்களும் அடித்துகொள்ளாமால் களத்திற்கு வெளியே பரஸ்பர ஒற்றுமையைப் பேணுவர் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.