
தோக்யோ, நவம்பர்-7, நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனூஷுக்கு இன்று காலை ஜப்பான் தலைநகர் தோக்யோவில் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷயா என்பவரை தனூஷ் கரம் பிடித்தார்.
அதில் இரு வீட்டார், உறவினர்கள், திரையுலக நண்பர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
திரையுலகிலிருந்து நடிகர் சரத்குமார் -ராதிகா தம்பதியர், நடிகைகள் சுஹாசினி, குஷ்பூ, மீனா, நடிகர் கார்த்தி, நடன இயக்குநர் கலா உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்றனர்.
தனுஷ் சிறுவயதிலேயே தசை சிதைவு என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் அவரால் நடக்க முடியாமல் போய் விட்டது.
பின்னர் சித்த வைத்தியம் மூலம் அவருக்கு சிகிச்சை அளித்த வந்த நெப்போலியன், மகனின் விருப்பத்திற்காக குடும்பத்தோடு அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்து விட்டார்.
இந்நிலையில், விமானத்தில் இந்தியாவுக்கு வர முடியாதென்பதால், சில மாதங்களுக்கு முன் காணொலி மூலமாக இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
திருமணத்தை அமெரிக்காவிலேயே நடத்தினால் குடியுரிமை உள்ளிட்ட பிரச்னைகள் வருமென்பதால், கப்பல் மூலமாக பயணமாகி ஜப்பானில் அன்பு மகனின் திருமணத்தை நெப்போலியன் நடத்தி முடித்துள்ளார்.