Latestமலேசியா

கிள்ளான் பள்ளத்தாக்கில் 50க்கும் மேற்பட்ட ஆயுதக் கொள்ளைகளில் சம்பந்தப்பட்ட 5 நபர்கள் சுட்டுக் கொலை

சுபாங் ஜெயா, மார்ச் 30 – கிள்ளான் பள்ளத்தாக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட ஆயுதக் கொள்ளைகளில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் சந்தேகத்திற்குரிய ஐந்து குற்றவாளிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

புத்ரா ஹய்த், பெர்சியரன் ஹார்மோனியில் குற்றச் செயல் தடுப்பு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸ் குழுவினர் 25 மற்றும் 30 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழிகளை கண்டனர். நேற்றிரவு 11.30 மணியவில் பெரோடுவா ஆக்சியா காரில் அந்த ஐவரும் சந்தேகத்திற்குரிய வகையில் காணப்பட்டதை தொடர்ந்து பரிசோதனைக்காக அவர்களது காரை போலீசார் நிறுத்த முயன்றனர்.

உள்நாட்டைச் சேர்ந்த ஐவரும் மிகவும் விரைவாக அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதால் அக்காரை நோக்கி போலீசார் பல முறை எச்சரிக்கை வேட்டை கிளப்பினர்.

புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைத்துறையின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களைக் கொண்ட போலீஸ் குழுவினருடன் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் போலீஸ் படையின் அதிகாரிகளும் இருந்த போலீஸ் வாகனம் அந்த சந்தேக பேர்வழியின் வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றது.

அப்போது சந்தேகப் பேர்வழிகள் போலீஸ் காரின் பின்னால் மோத முயன்றதோடு போலீஸ்காரர்களை நோக்கி சுடத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக போலீசாரும் அந்த சந்தேகப் பேர்வழிகளை நோக்கி திருப்பிச் சுட்டனர்.

அந்த சந்தேகப் பேர்வழிகள் மரணம் அடைந்தது உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்களது காரை பரிசோதித்த போலீசார் அக்காரில் இரண்டு  சுடும் ஆயுதங்கள் மற்றும் இதர ஆயுதங்கள் இருந்ததையும் கண்டுப்பிடித்தனர்.

ஆயுதக் கொள்ளைகள் மற்றும் இதர குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டதன் தொடர்பில் அந்த சந்தேகப் பேர்வழிகளுக்கு எதிராக ஏற்கனவே போலீசார் பிடி வாரண்டை பிறப்பித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

ஷா ஆலம், பூச்சோங், கிள்ளான், சுபாங் ஜெயா, காஜாங், செந்தூல் ஆகிய பகுதிகளில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை வேன்கள் பணத்தை விநியோகம் செய்தபோது அவற்றை கொள்ளையடிப்பது, வீடுகளை உடைத்து ரொக்கம் மற்றும் நகைகளையும் அவர்கள் கொள்ளையிட்டு வந்திருப்தும் தெரியவந்ததாகப் போலீசார் தெரிவித்தனர்.

ஆயுதக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தபோது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!