
கிள்ளான், பிப் 21 – கிள்ளான், ராஜா மஹாடி தேசிய இடைநிலைப்பள்ளியில் பள்ளி நேரத்திலேயே 4 மற்றும் 5ஆம் படிவ மாணவர்களுக்கு தமிழ் , தமிழ் இலக்கிய பாட போதனை நடத்தமுடியாது என அறிவித்திருக்கும் பள்ளி முடிவு குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் அவர்களது மனக்குமுறலை செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜிடம் தெரிவித்த நிலையில், இவ்விவகாரம் குறித்து கல்வித்துறை துணையமைச்சரின் கவனத்திற்க்கு கொண்டுச் செல்லப்படது.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை பள்ளி நிர்வாகத்தினரை கிள்ளான் மாவட்ட கல்வி அதிகாரிகள் சந்தித்தனர்.
மாணவர்களின் நலன் கருதி இந்த விவகாரம் விரைவாக கவனிக்கப்பட்டு சுமூகமான தீர்வு காணப்படும் என கல்வித்துறை துணையமைச்சரின் சிறப்பு அதிகாரி எலன் தம்மிடம் தெரிவித்திருப்பதாக குணராஜ் கூறியுள்ளார்.
பள்ளி பாட நேரத்திலேயே தமிழ் மற்றும் தமிழ் இலக்கிய பாடம் நடைபெறாது என அப்பள்ளியின் நிர்வாகம் முடிவு செய்ததால் மாணவர்களும் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்த தகவலை நேற்று வணக்கம் மலேசியாவும் வெளியிட்டிருந்து.
பொருத்தமான பள்ளி நேரத்திலேயே தமிழ் மற்றும் தமிழ் இலக்கிய பாடங்களை போதிக்கும் விவகாரத்தில் நியாயமான தீர்வு காணப்பட வேண்டும்.
தங்களது தாய்மொழியை பயில்வதற்கான இந்திய மாணவர்களின் நியாயமான உரிமைக்கு நல்ல முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதோடு இந்த விவகாரத்தை தாம் தொடர்ந்து அணுக்கமாக கவனித்து வருவதாகவும் குணராஜ் வலியுறுத்தியுள்ளார்.