Latestமலேசியா

குளோபல் இக்வான் சிறார் இல்லங்களிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்புக் கல்வித் திட்டம்

கோலாலம்பூர், அக்டோபர்-3 – குளோபல் இக்வான் நடத்தும் சிறார் இல்லங்களிலிருந்து மீட்கப்பட்ட சிறார்கள் மற்றும் பதின்ம வயதினருக்காக, கல்வி அமைச்சு சிறப்புக் கல்வித் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக நலத்துறையான JKM-மின் ஒத்துழைப்புடன் அக்டோபர் 1-ம் தேதி அத்திட்டம் தொடங்கியது.

சம்பந்தப்பட்ட குழந்தைகள் படிப்பில் பின்தங்குவதைத் தடுக்கும் முயற்சியாக, அவர்களுக்கு முறையான மற்றும் கட்டமைக்கப்பட்ட கல்வியை வழங்கும் வகையில் அக்கல்வித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சின் கீழுள்ள 68 ஆசிரியர்கள் நேரடியாக அத்திட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.

பள்ளிப் பக்கமே எட்டிப் பார்க்காத குழந்தைகளுக்கு முதலாமாண்டு மாறுதல் திட்டமும், ஆரோக்கியச் சிந்தனைக்கான தலையீட்டு பயிற்சித் திட்டமும் பயன்படுத்தப்படுகிறது.

அவ்விரு திட்டங்களும் குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்காக அவர்களின் சமூக-பொருளாதார, அறிவாற்றல் மற்றும் உடல் அம்சங்களை வலியுறுத்துகின்றன.

கல்வியறிவோடு, எண்ணுவதில் ஆற்றல் பெறுவதையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான தயாரிப்பு அதுவாகும் என அமைச்சு வருணித்தது.

செப்டம்பர் 11-ல், சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் குளோபல் இக்வானின் 20 சிறார் இல்லங்களில் போலீசார் சோதனை நடத்தி 402 குழந்தைகளை மீட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!