குவாந்தான், செப்டம்பர்-13, குவாந்தானில் பல் கிளினிக் உள்ளிட்ட இரு தனியார் கிளினிக்குகள் ஈராண்டுகளாகச் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்திருப்பது அம்பலமாகியுள்ளது.
பொது மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வியாழக்கிழமை மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் அது தெரிய வந்ததாக, மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ Dr ருஸ்டி அப்துல் ரஹ்மான் (Datuk Dr Rusdi Abd Rahman) கூறினார்.
சான்றிதழ் இல்லாமல் 20 வயதிலான 3 பெண்கள் அவ்விரு கிளினிக்குகளையும் நடத்தி வந்துள்ளனர்.
ஒருவர் உரிமையாளர், இருவர் பணியாளர்கள் ஆவர்.
உரிமையாளரின் சொந்த வீட்டை பல் கிளினிக்காகவும், அழகு மையம் என்ற பெயரில் பதிவுச் செய்யப்பட்ட வளாகத்தை சுகாதார கிளினிக்காகவும் அவர்கள் மாற்றியிருக்கின்றனர்.
அச்சோதனையில், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என 50,000 ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சில மருந்துகள் பதிவுப் பெறாதவை; இணையம் வாயிலாக அவை வாங்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
சம்பந்தப்பட்ட மூன்று பெண்கள் மீதான விசாரணை அறிக்கை முழுமைப் பெறும் தருவாயில் உள்ளது; விரைவிலேயே சட்டத் துறை அலுவலகத்திடம் அது ஒப்படைக்கப்படும்.
நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 3 லட்சம் ரிங்கிட் அபராதமும் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.