
கேரளா, பிப்ரவரி 23 – கேரளாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கர்ப்பப்பையிலிருக்கும் கட்டியை அறுவை சிகிச்சை வாயிலாக அகற்றும் போது, தவறுதலாக ஆர்டரி ஃபோர்செப்ஸ் (artery forceps) எனும் மருத்துவ கருவியை வயிற்றுக்குள் வைத்து தைத்த சம்பவம் சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்து இப்பொழுதுதான் கண்டுபிடிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் நீண்ட காலமாக வயிற்று வலியால் அவதியுற்று வந்த நிலையில், அவர் சமீபத்தில் எடுத்த ‘எக்ஸ்ரே’ பரிசோதனையில் அந்தக் கருவி வயிற்றுக்குள் இருப்பது தெரியவந்துள்ளது. மருத்துவக் கல்லூரி அதனை அகற்ற முன்வந்தபோதிலும், உறவினர்கள் வேறொரு மருத்துவமனையைத் தேர்வு செய்து, கருவியை அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சையைச் செய்து முடித்து அக்கருவியை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததால், அம்மருத்துவர்கள் முன்னிலையிலேயே சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட டாக்டர் மீது மனித உயிருக்கு ஆபத்து விளைவித்தல் மற்றும் அலட்சியம் குற்றச்சாட்டில் போலீசார் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.



