
லக்னோவ், செப்டம்பர்-20,இந்தியாவின் லக்னோவில், வாங்கிய கைப்பேசிக்கான மாதாந்திர தவணைப் பணத்தைச் செலுத்தத் தவறிய இளைஞரிடமிருந்து வலுக்கட்டாயமாக இரத்தம் எடுக்கப்பட்டதுடன் வீட்டுப் பணியாளராகவும் அவர் அடைத்து வைக்கப்பட்ட கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நிரந்தர வேலையற்ற அந்த இளைஞர், ஓராண்டு தவணைத் திட்டத்தின் கீழ் மாதத்திற்கு சுமார் 130 ரிங்கிட் செலுத்தும் வகையில் அண்மையில் ஒரு கைப்பேசியை வாங்கியிருந்தார்.
எனினும், அவரால் முதல் மாதத் தவணையைச் செலுத்த முடியாததால் ஆத்திரமடைந்த இரு கடன் வசூலிப்பாளர்கள், செப்டம்பர் 8-ஆம் தேதி அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை வலுக்கட்டாயமாக ஓர் இரத்த வங்கிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை மிரட்டி ஒரு யூனிட் இரத்தத்தை எடுக்க வைத்ததோடு, அதற்காக வழங்கப்பட்ட பணத்தையும் பறித்துக் கொண்டனர்.
அத்துடன் நிற்காமல், அவரை ஒருவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று 4 நாட்களுக்கும் மேலாக அடைத்து வைத்து, கட்டாய வீட்டு வேலைகளைச் செய்ய வைத்துள்ளனர்.
மகனைக் காணவில்லை என அவரது தாயார் போலீஸில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
போலீஸார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



