
கோலாலம்பூர், ஏப் 24 – கொரிய அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த அந்நாட்டு பிரஜை ஒருவர் தனது சக நாட்டைச் சேர்ந்த மூவரால் கடத்தப்பட்டார்.
எனினும் ஏப்ரல் 21 ஆம்தேதியன்று மலாக்காவில் போலீஸ் நடத்திய அதிரடி நடவடிக்கையில் அவர் மீட்கப்பட்டார்.
இந்த நடவடிக்கையில், 28 முதல் 40 வயதுக்குட்பட்ட மூன்று சந்தேக நபர்களை போலீசார் கைது செய்ததன் மூலம் அந்த கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டது.
கடத்தப்பட்ட 40 வயது நபரை விடுவிப்பதற்காக அவரது நண்பரை சந்தேக நபர் தொடர்பு கொண்டு கிரிப்டோ கணக்கு மூலம் சுமார் 10 மில்லியன் அமெரிக்க டாலர் பிணைப்பணத்தை கோரியதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குனர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
ஏப்ரல் 17 ஆம் தேதியன்று கெந்திங் மலையிலிருந்து கோலாலம்பூருக்குப் பயணம் செய்துகொண்டிருந்தபோது அந்த நபர் கடத்தப்பட்டார்.
அவர் மலாக்காவிலுள்ள ஒரு ஹோம் ஸ்டே இல்லத்தில் பிணையாக பிடித்து வைக்கப்பட்டதை அறிந்த போலீசார் பஹாங், மலாக்கா மற்றும் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறைகளை உள்ளடக்கிய ஒரு சிறப்புக் குழுவை அமைத்து தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் நடவடிக்கையில் , அந்த ஆடரை மீட்டதாக குமார் கூறினார்.
வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறையின் கிரிப்டோ பிரிவுடன் இணைந்து நடத்தப்பட்ட விசாரணையின் விளைவாக, கிரிப்டோ கணக்கில் 2.46 மில்லியன் அமெரிக்க டாலர் இருந்ததை போலீஸ் கண்டறிந்து , அந்த முழுத் தொகையையும் முடக்கியதுடன், சுமார் RM112,000 ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்த தகவலையும் குமார் வெளியிட்டார்.



