
கோலாலம்பூர், மே-16 -கூட்டரசு தலைநகரம் முழுவதும் பேருந்து நிறுத்தங்களைக் கட்டுவதற்கும் மேம்படுத்துவதற்கும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு கூடுதலாக 1.5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டிற்கு போக்குவரத்து அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
கோலாலம்பூரில் உள்ள பல இடங்களில் முறையான பேருந்து வசதிகள் இல்லாதது குறித்து பொதுப் போக்குவரத்துப் பயணிகளிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
முறையான பேருந்து நிலையம், அதற்கென ஒதுக்கப்பட்ட பகுதி அல்லது வழிகாட்டிப் பலகைகள் இல்லாததால், நகர்ப்புற மக்கள் அடிக்கடி சாலையோரத்தில் காத்திருக்க வேண்டியிருப்பதாக நாங்கள் பெறும் ஒரு பொதுவான புகாராகும்.
இதை நாங்கள் சரிசெய்ய விரும்புகிறோம் என்று இன்று செகம்புட் வடக்கு ரயில் நிலையத் திறப்பு விழாவில் ஆற்றிய உரையில் அந்தோனி லோக் தெரிவித்தார்.
பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேசத்திற்கான அமைச்சர் ஹன்னா யோ, (Hannah Yeoh) , துணைப் போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபோல்லா
( Hasbi Habibollah) மற்றும் கோலாலம்பூர் மேயர் டத்தோஸ்ரீ பட்லுன் மாக் ஊஜூட்
( Fadlun Mak Ujud ) ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்தையும் கட்டுவதற்கோ அல்லது மேம்படுத்துவதற்கோ 15,000 ரிங்கிட் முதல் 30,000 ரிங்கிட் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், இந்த ஒதுக்கீடு சுமார் 100 பேருந்து நிறுத்தங்களின் பணிகளை உள்ளடக்கும் என்றும் அவர் கூறினார்.



