
சென்னை, மே-24,
கோயம்புத்தூரில் 10 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமை மற்றும் கொடூரக் கொலை விவகாரத்தில், குற்றவாளிகளுக்கு சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் எனத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உறுதியளித்துள்ளார்.
கோவையில் காணாமல் போன சிறுமி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தது ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து விரைந்து செயல்பட்ட தனிப்படை போலீஸார், POCSO மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் கார்த்தி மற்றும் மோகன் ஆகிய இரு சந்தேக நபர்களை அதிரடியாகக் கைதுச் செய்துள்ளனர்.
தப்பியோட முயன்ற முக்கியக் குற்றவாளி கார்த்திக்கு காலிலும் கையிலும் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மனிதநேயமற்ற கொடூரச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையை மிகக் குறுகிய காலத்திற்குள் முடித்து, குற்றப்பத்திரிகையைத் துரிதமாகத் தாக்கல் செய்யுமாறும் போலீஸுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாகக் குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.



